/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடகிழக்கு பருவ மழைக்கு பயிர்களை பாதுகாக்க வழிமுறைகள்
/
வடகிழக்கு பருவ மழைக்கு பயிர்களை பாதுகாக்க வழிமுறைகள்
வடகிழக்கு பருவ மழைக்கு பயிர்களை பாதுகாக்க வழிமுறைகள்
வடகிழக்கு பருவ மழைக்கு பயிர்களை பாதுகாக்க வழிமுறைகள்
ADDED : அக் 28, 2025 10:34 PM
செங்கல்பட்டு: வடகிழக்கு பருவமழை காலத்தில், தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன் அறிக்கை:
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைவதை தொடர்ந்து, அதிக மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளது. எனவே, தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை, விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.
அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் உடனே அறுவடை செய்து, மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். இதனால், காற்றால் ஏற்பாடும் சேதத்தை தவிர்க்கலாம்.
மழைநீர் தேக்கத்தை குறைக்க, உபரிநீர் வடிந்த பிறகு நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடிகால் வசதியற்ற நிலங்களில், ஆங்காங்கே வடிகால் அமைக்க வேண்டும்.
காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில், கம்புகளால் முட்டுக்கொடுக்க வேண்டும். மழைநீர் வடிந்த பின், பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரமிட்டு, மண் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கோள்ள வேண்டும்.
பல்லாண்டு பழப்பயிர்களான மா, கொய்யா, மாதுளை ஆகியவற்றை ஒழுங்குபடுத்த, கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு, கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.
தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய் தடுப்பு மருந்துகள், துார் பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
இளம்செடிகள் காற்றினால் பாதிக்காதபடி, கம்புகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன், மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைத்து, பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும்.
மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும். நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். உரிய நேரத்தில் தேங்காய் அல்லது இளநீரை அறுவடை செய்தல் மூலம், காற்று மற்றும் புயலினால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கலாம்.
வாழை பயிரை பொறுத்தமட்டில் காற்றால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு, மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும்.
சவுக்கு, யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரத்தை சுற்றிலும் சுத்தப்படுத்தி, நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
மேலும் 75 சதவீதம் மேல் முதிர்ந்த வாழை தார்களை அறுவடை செய்ய வேண்டும்.
காய்கறி பயிர்களை பொறுத்தவரையில், வயல்களிலும் அதிக நீர் தேங்காதபடி வடிகால் வசதி செய்திட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

