sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையோரம், நீர்நிலைகளில் இறைச்சி கழிவு குவிப்பு மர்ம நபர்கள் ஆட்டத்திற்கு கடிவாளம் போடுவது யார்?

/

சாலையோரம், நீர்நிலைகளில் இறைச்சி கழிவு குவிப்பு மர்ம நபர்கள் ஆட்டத்திற்கு கடிவாளம் போடுவது யார்?

சாலையோரம், நீர்நிலைகளில் இறைச்சி கழிவு குவிப்பு மர்ம நபர்கள் ஆட்டத்திற்கு கடிவாளம் போடுவது யார்?

சாலையோரம், நீர்நிலைகளில் இறைச்சி கழிவு குவிப்பு மர்ம நபர்கள் ஆட்டத்திற்கு கடிவாளம் போடுவது யார்?


ADDED : ஏப் 08, 2025 12:33 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நெடுஞ்சாலை ஓரம் தொடர்ந்து இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்படைந்து தண்ணீரின் தன்மை மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, வண்டலுார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய எட்டு தாலுகாக்கள் உள்ளன. இதில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 528, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 620 ஏரிகள் உள்ளன.

இவற்றில் பல ஏரிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருத்தேரி, சிங்கபெருமாள்கோவில், செங்குன்றம், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் மாசடைவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

* திருப்போரூர்

திருப்போரூர் ஒன்றியத்தில் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை உட்பட பல்வேறு முக்கிய சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி, தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன.

சமீப காலமாக சாலையோரம் ஆங்காங்கே குப்பை, உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.

அதேபோல், விடுமுறை நாட்களில் அதிக அளவில் இறைச்சி கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, சாலையோரம் வீசி விட்டுச் செல்கின்றனர்.

குறிப்பாக ஓ.எம்.ஆர்., சாலையில், இளவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகள் அதிகமாக குவிக்கப்படுகின்றன.

* செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், 25க்கும் மேற்பட்ட கோழி இறைச்சிக் கடைகள் உள்ளன. சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு புறவழிச்சாலையில், சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாயில் மர்ம நபர்கள், கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

இதை தடுக்க வேண்டிய, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி, செங்கல்பட்டு - சென்னை வழித்தடத்தில் உள்ள, ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதியிலும், கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இந்த கோழிக் கழிவுகளை பன்றி, நாய்கள் உணவாக உண்ணுகின்றன. இதனால், இவற்றுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

மேலும், கோழிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதால், இந்த சாலையில் செல்வோர் திணறியபடி செல்கின்றனர்.

* அச்சிறுபாக்கம்

இதேபோல, அச்சிறுபாக்கம் அருகே திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம், பெரும்பேர் கண்டிகை ஊராட்சி, மலையடி ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரும்பேர் கண்டிகை செல்லும் வழியில், வஜ்ஜிரகிரி மலை உள்ளது.

இங்கு மான், காட்டுப் பன்றி, நரி, முயல், உடும்பு, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. மலையடிவாரத்தில் உள்ள புதர்களில் கோழி இறைச்சிக் கழிவுகள், ஹோட்டல் உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள் என, 10 டன்னுக்கும் அதிகமான குப்பை கழிவுகளை, மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.

அருகிலுள்ள உணவகங்களில் இருந்து கழிவுநீர் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு, இப்பகுதியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.

இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இவற்றை உண்ணும் வன விலங்குகளும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

* வண்டலுார்

வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், 8 ஏக்கர் பரப்புள்ள தாங்கல் ஏரி உள்ளது. வண்டலுார் தாங்கல் ஏரியைச் சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் உள்ளன.

தவிர, தள்ளுவண்டி கடை உட்பட 10க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன.

இறைச்சி கடைகள், உணவகங்களில் தேங்கும் கழிவுகள், இரவு நேரத்தில் ஏரிக்கரை ஓரம் கொட்டப்படுகின்றன. அந்த கழிவுகளை தெரு நாய்கள் உண்கின்றன. தெரு நாய்கள் இனப்பெருக்கத்திற்கு இந்த கழிவுகள் உதவுகின்றன.

தவிர, உணவகங்கள் வாயிலாக கொட்டப்படும் கழிவுகள் அழுகி, அதிலிருந்து புழுக்கள் உருவாகி, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று நோய்கள் உருவாகின்றன.

மேலும், இறைச்சி மற்றும் உணவுக் கழிவுகளை உண்ணும் ஈக்கள், அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று, நோயைப் பரப்புகின்றன.

* கல்பாக்கம்

கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதி உள்ளது. இங்குள்ள மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, கோழி இறைச்சிக் கடைகள் ஏராளமாக உள்ளன. கோழி சிறகுகள், இறைச்சிக் கழிவுகள், அதே பகுதி பகிங்ஹாம் கால்வாயில் நீண்ட காலமாக குவிக்கப்படுகின்றன.

கழிவுகள், கால்வாயிலும், கரையிலும் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. கடும் துர்நாற்றம் வீசுகிறது. அணுசக்தி துறை கல்பாக்கம் நகரிய நுழைவாயிலில், இத்தகைய அவலம் ஏற்பட்டும், ஊராட்சி நிர்வாகம் தடுக்காமல், மெத்தனமாக உள்ளதாக, அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுபோல், செங்கல்பட்டு மாவட்டம் முழுதும் கண்ட இடங்களில் இறைச்சிக் கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் கால்நடைகள், வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. துர்நாற்றத்துடன் கூடிய காற்றை சுவாசிக்கும் மனிதர்களுக்கும், பல்வேறு புதுவிதமான நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் இறைச்சிக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்படும் பிரச்னைக்கு, சுகாதாரத் துறை அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

பொது வெளியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அவற்றை தெருநாய்கள் உண்கின்றன. இதனால், தெரு நாய்கள் அதிகரித்து வருகின்றன. இறைச்சி கழிவுகளை உண்பதால் வெறி பிடித்து, உணவு கிடைக்காத நேரங்களில், கிராமங்களில் சுற்றி வரும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை கடிப்பதாக, அடிக்கடி புகார்கள் வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக இறைச்சிக் கடைகளை கணக்கெடுத்து, அவர்கள் இறைச்சிக் கழிவுகளை கையாளும் முறைகள் குறித்து விளக்க வேண்டும்.

- அரசு கால்நடை மருத்துவர்

தேசிய நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதியை கடப்பதற்குள், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இது இடையூறாக உள்ளது. இறந்த கால்நடைகளின் உடல்களையும் சாலையோரத்தில் வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால், மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளது பொது வெளியில் குப்பை கொட்டுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சிக் கடைகளை கண்காணிக்க வேண்டும்.

- த.இளங்கோவன், தனியார் நிறுவன ஊழியர்,சிங்கபெருமாள்கோவில்.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us