/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பார்வைத்திறன் குறைந்தோருக்கான புத்தக பைண்டிங் படிப்பு தொடருமா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
/
பார்வைத்திறன் குறைந்தோருக்கான புத்தக பைண்டிங் படிப்பு தொடருமா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
பார்வைத்திறன் குறைந்தோருக்கான புத்தக பைண்டிங் படிப்பு தொடருமா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
பார்வைத்திறன் குறைந்தோருக்கான புத்தக பைண்டிங் படிப்பு தொடருமா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : நவ 24, 2024 08:43 AM

சென்னை : சென்னை பூந்தமல்லி யில் உள்ள பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான தொழிற்பயிற்சி மையத்தில், புத்தக பைண்டிங் படிப்பை, இந்த கல்வியாண்டில் தொடர முடியுமா என்பதற்கு, அரசு பதில் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான தேசிய கூட்டமைப்பின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் தாக்கல் செய்த மனு:
பூந்தமல்லியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில், இந்த கல்வியாண்டில் புத்தக பைண்டிங் படிப்புக்கு விண்ணப்பம் பெறும் நடைமுறை இன்னும் துவங்கப்படவில்லை. புத்தக பைண்டிங் உள்ளிட்ட பல படிப்புகள், அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டன. அதனால், பலர் பயிற்சி பெற்று, அரசுத்துறைகளில் பணியாற்றுகின்றனர்; தனியாகவும் தொழில் நடத்துகின்றனர்.
பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற வகை செய்யும் இந்தப் படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும். இதுகுறித்து, அரசுக்கு அனுப்பிய மனுவுக்கு, எந்த பதிலும் இல்லை. எனவே, புத்தக பைண்டிங் படிப்பை, இந்த கல்வியாண்டில் துவங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. இந்த கல்வியாண்டில், புத்தக பைண்டிங் படிப்பை தொடர முடியுமா என்பது குறித்து, அரசிடம் விளக்கம் பெற அரசு வழக்கறிஞர் பிரபாகர் அவகாசம் கோரினார்.
மேலும், புத்தக பைண்டிங் படிப்புக்கு மாற்றான படிப்புகள் குறித்து பரிசீலிக்கும் போது, மனுதாரரையும் பங்கேற்க செய்ய, துறை செயலரிடம் தெரிவிப்பதாகவும், அரசு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து விசாரணையை, டிசம்பர் 5க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.