திருப்பரங்குன்றம் மலைக்கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி
திருப்பரங்குன்றம் மலைக்கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி
ADDED : டிச 22, 2025 02:37 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் கோவில் மலை மீது உச்சியில் உள்ள தீபத்தூணில், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தீபத்தை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக அரசைக் கண்டித்து ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், பாஜ போன்ற கட்சியினரும் அங்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், திருப்பரங்குன்றம் மலையின் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக்கூடு விழாவையொட்டி, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் முஸ்லிம்கள் கொடியேற்ற நிகழ்வை நடத்தினர். இதையடுத்து, நேற்று பிற்பகலில் தங்களையும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி 15க்கும் மேற்பட்ட ஹிந்து சமூக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்பவர்களின் செல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொண்டு, தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வீடியோ, போட்டோ எடுக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

