/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுத்தப்பட்ட 25 அரசு பஸ்கள் இயக்கப்படுமா?...எதிர்பார்ப்பு: மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணியர் அவதி
/
நிறுத்தப்பட்ட 25 அரசு பஸ்கள் இயக்கப்படுமா?...எதிர்பார்ப்பு: மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணியர் அவதி
நிறுத்தப்பட்ட 25 அரசு பஸ்கள் இயக்கப்படுமா?...எதிர்பார்ப்பு: மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணியர் அவதி
நிறுத்தப்பட்ட 25 அரசு பஸ்கள் இயக்கப்படுமா?...எதிர்பார்ப்பு: மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணியர் அவதி
ADDED : ஜன 26, 2025 01:21 AM
மாமல்லபுரம்:சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் இருந்தும், பிற இடங்களில் இருந்து மாமல்லபுரத்திற்கும் இயக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், 10 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டன. சுற்றுலா முன்னேற்ற காலத்தில், போதிய பஸ்கள் இன்றி, பயணியர் அவதிப்படுகின்றனர். அவற்றை மீண்டும் இயக்க, பயணியர் வலியுறுத்துகின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், பயணியர் வருகை குறைவு. அக்காலத்திலேயே, அரசு பஸ்கள், மாமல்லபுரத்திலிருந்தும், பிற பகுதிகளிலிருந்து ஏராளமாக இயக்கப்பட்டன.
கல்பாக்கம் - சென்னை இடையே, கிழக்கு கடற்கரை சாலை வழியில், தடம் எண் 118, பழைய மாமல்லபுரம் சாலை வழியில், தடம் எண் 119 ஆகிய பஸ்கள், மாமல்லபுரம் வழியாக, அரைமணி நேரத்திற்கு ஒன்று இயக்கப்பட்டன.
மாமல்லபுரம் - சென்னை இடையே, செங்கல்பட்டு வழியாக, தடம் எண் 108பி, 108 கே ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டன.
மாமல்லபுரம் - தாம்பரம் இடையே, கேளம்பாக்கம் வழியாக, தடம் எண் 115 , வந்தவாசி - மாமல்லபுரம் இடையே, தடம் 157 எம், 157 ஏ ஆகிய பஸ்கள், காஞ்சிபுரம் வழியாக இயக்கப்பட்டன. காஞ்சிபுரம் - மாமல்லபுரம் இடையே, தடம் எண் மாமல்லபுரம் - திருப்பதி இடையே, தடம் எண் 212 எச், பொன்னேரி - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 119பி ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த பஸ்கள், பல ஆண்டுகளுக்கு முன், படிப்படியாக குறைக்கப்பட்டு, நாளடைவில் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
தற்போது மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையே, தடம் எண் 508 மட்டுமே இயங்குகிறது. சென்னை தடத்தில் முற்றிலும், அரசு பஸ்கள் இல்லை. மாமல்லபுரம் - திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை தடத்தில், தடம் எண் 588 மாநகர் பஸ்கள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. பயணியர் பெருகிவரும் தற்காலத்தில், மாமல்லபுரத்திலிருந்து, செங்கல்பட்டு தவிர்த்து, பிற இடங்களுக்கு, முற்றிலும் பஸ் வசதி இல்லை.
சென்னை செல்லும் பயணியர், சென்னை - புதுச்சேரி பஸ்களில், கூட்ட நெரிசலில் கடும் அவதியுடன் பயணம் செய்கின்றனர்.
பழைய மாமல்லபுரம் சாலை பகுதியில், கேளம்பாக்கம் வரையே, தற்போது மாநகர் பஸ் உள்ளது. கேளம்பாக்கத்திற்கு அப்பால் உள்ள சிறுசேரி, நாவலுார், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, கேளம்பாக்கம் சென்று, மீண்டும் மற்றொரு பஸ்சில் செல்ல வேண்டும்.
இத்தகைய சிக்கல்களால், பணம், கால விரயம் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
காஞ்சிபுரம் - மாமல்லபுரம் தடத்தில் நிறுத்தப்பட்ட தடம் எண் 212ஏ பஸ், தினமலர் செய்தியைத் தொடர்ந்து, அண்மையில் இயங்க துவங்கியது. பிற வழித்தடங்களில் இயங்கிய 25க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டபிறகு, இயங்கவில்லை.
இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:
சுற்றுலா வளர்ச்சி இல்லாத காலத்தில், மாமல்லபுரத்திலிருந்தும், மற்ற ஊர்களிலிருந்து மாமல்லபுரத்திற்கும், ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டன. பின்னர் நிறுத்தி விட்டனர். எதற்காக நிறுத்தப்பட்டது என்பது தெரியவில்லை.
இப்போது பயணியர் குவிகின்றனர். நிறுத்தப்பட்ட அனைத்து வழித்தட பஸ்களை மட்டுமின்றி, புதிய வழித்தடங்களிலும், பஸ்கள் இயக்குவது அவசியம். அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.