/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?
/
சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?
சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?
சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?
ADDED : நவ 22, 2024 12:12 AM

கூடுவாஞ்சேரி:பெருங்களத்துாரில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், எட்டு வழி சாலையாக அகலப்படுத்தும் பணிக்காக, அனைத்து நிழற்குடைகளும் அகற்றப்பட்டன.
தற்போது, சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடைகள், இதுவரை மீண்டும் நிறுவப்படாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், வெயில் மற்றும் மழையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையின் இரு புறங்களிலும், பயணியர் நிழற்குடை இல்லாததால், பயணியர் கடும் சிரமம் அடைகின்றனர்.
பேருந்துக்காக, அவர்கள் சாலைகளிலும், அருகில் உள்ள கட்டடங்களின் ஓரங்களிலும் நின்று, மழை மற்றும் வெயில் காலங்களில், சிரமத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, நெடுஞ்சாலை துறை நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. ஆய்வுகு வந்த அதிகாரிகளும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
'விரைவில் நிழற்குடை அமைக்கிறோம்' என வாக்குறுதி அளித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை நிழற்குடை அமைக்க முயற்சி கூட மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், நந்திவரம் அரசு மருத்துவமனை முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில், முதியோர், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் உள்ளிட்டோர், நிழற்குடை இல்லாததால் சாலையிலேயே பேருந்துக்காக கத்திருந்து பயணிக்கின்றனர்.
எனவே, சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட நிழற்குடைகளை, விரைவில் மீண்டும் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.