/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுசேரி மெட்ரோ ரயில் தடம் மாமல்லை வரை நீட்டிக்கப்படுமா?
/
சிறுசேரி மெட்ரோ ரயில் தடம் மாமல்லை வரை நீட்டிக்கப்படுமா?
சிறுசேரி மெட்ரோ ரயில் தடம் மாமல்லை வரை நீட்டிக்கப்படுமா?
சிறுசேரி மெட்ரோ ரயில் தடம் மாமல்லை வரை நீட்டிக்கப்படுமா?
ADDED : பிப் 14, 2025 11:44 PM
மாமல்லபுரம், சிறுசேரி வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் தடத்தை, சுற்றுலா முக்கியத்துவம் கருதி, மாமல்லபுரம் வரை நீட்டிக்க, பயணியர் வலியுறுத்துகின்றனர்.
மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் முதல்கட்டமாக, விம்கோ நகர் - விமான நிலையம் இடையேயும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையேயும், மெட்ரோ ரயில்களை இயக்குகிறது.
அடுத்தகட்ட திட்டமாக, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி; மாதவரம் - சோழிங்கநல்லுார்; மாதவரம் - சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க, நிலத்தடியிலும் மேம்பாலத்திலும் ரயில் தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா தடம், சென்னை மாநகர வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கிறது.
சிறுசேரி அருகில், சென்னையின் விரிவாக்க நகர் பகுதியாக வளர்ந்து வரும் கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகள் உள்ளன. சிறுசேரியிலிருந்து, 30 கி.மீ., தொலைவில், சுற்றுலாப் பகுதியான மாமல்லபுரம் உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண இந்திய, சர்வதேச பயணியர் அதிக அளவில் சுற்றுலா வருகின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் வார இறுதி நாள், அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில், மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.
இதேபோல், திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற, கந்தசுவாமி கோவிலில் வழிபட, தினசரி பக்தர்கள் திரள்கின்றனர். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, திருவிடந்தை பிரசித்தி பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவிலும், அருகில் உள்ளது. இந்த கோவிலுக்கும் பக்தர்கள் திரளாக வருகின்றனர்.
தற்போது மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம் பகுதிகளுக்கு, மாநகர் பேருந்து வசதி மட்டுமே உள்ளது.
இப்பகுதியில் ரயில் போக்குவரத்து துவக்க, ரயில்வே துறை முடிவெடுத்தும், நீண்ட காலமாக திட்டம் கிடப்பில் உள்ளது.
தற்போது, சிறுசேரி வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் தடத்தை, மேற்குறிப்பிட்ட பகுதிகள் வழியே, மாமல்லபுரம் வரை நீட்டித்தால், பயணியர் போக்குவரத்து எளிதாகும். சுற்றுலாவும் வளர்ச்சி பெறும்.
எனவே, வருங்கால போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, சிறுசேரி வரையிலான மெட்ரோ ரயில் தடத்தை, மாமல்லபுரம் வரை நீட்டிக்க வேண்டுமென சுற்றுலா பயணியர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.