/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னையில் இயங்கும் செங்கை வேளாண் அலுவலகம்விடிவு வருமா? திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
/
சென்னையில் இயங்கும் செங்கை வேளாண் அலுவலகம்விடிவு வருமா? திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
சென்னையில் இயங்கும் செங்கை வேளாண் அலுவலகம்விடிவு வருமா? திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
சென்னையில் இயங்கும் செங்கை வேளாண் அலுவலகம்விடிவு வருமா? திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 31, 2024 12:59 AM
செங்கல்பட்டு, சென்னை, நந்தனத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் செங்கல்பட்டு வேளாண்மை பொறியியல் உப கோட்ட அலுவலகத்தை, திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் அலுவலகம் இயங்குவதால் பண விரயம், நேர விரயம் ஏற்படுவதுடன், மானியம் குறித்த விபரம் தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரு வேளாண்மை பொறியியல் உப கோட்டங்கள்உள்ளன.
இதில், செங்கல்பட்டு உப கோட்டத்தில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் ஆகிய வட்டாரங்கள் உள்ளன. மேலும், செங்கல்பட்டுக்கான உப கோட்ட அலுவலகம், சென்னை நந்தனத்தில் இயங்கி வருகிறது.
மதுராந்தகம் வேளாண் மை பொறியியல் உப கோட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஆகிய வட்டாரங்கள் உள்ளன.
இவற்றின் அலுவலகம், மதுராந்தகத்திலேயே இயங்கி வருகிறது. இதனால், இந்த வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு தேவையான டிராக்டர், மண் தள்ளும் வாகனம், கை தெளிப்பான், விசை தெளிப்பான், நாற்று நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம் உள்ளிட்டவற்றை பெற மனு அளித்து, அதிக மானியத்தில் பெற்று பயனடைகின்றனர்.
ஆனால், செங்கல்பட்டிற்கான வேளாண்மை பொறியியல் உப கோட்ட அலுவலகம் சென்னை, நந்தனத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு தேவையான டிராக்டர், கை தெளிப்பான், நாற்று நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகளைப் பெற மனு அளிக்க, சென்னை நந்தனத்தில் உள்ள உட்கோட்ட அலுவலகத்திற்குத் தான் செல்ல வேண்டும்.
விவசாயிகள் இல்லாத இடத்தில் உப கோட்ட அலுவலகம் செயல்பட்டு வருவதால், விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை. செங்கல்பட்டு உப கோட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்களின் ஒவ்வொரு விவசாய தேவைக்கும் சென்னை செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இதனால், விவசாயிகளுக்கு தேவையற்ற பண விரயமும், கால விரயமும் ஏற்படுகிறது.
எனவே, நந்தனத்தில் இயங்கும் வேளாண்மை உட்கோட்ட பொறியியல் அலுவலகத்தை, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக, கலெக்டர் மற்றும் அரசிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
அத்துடன், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திலும், தொடர்ந்து இதுகுறித்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் வைக்கும் இந்த கோரிக்கை, அரசிடன் சென்று அடையவே இல்லை என, அதிருப்தியில் உள்ளனர்.
செங்கல்பட்டு உப கோட்டத்திற்கு நியமிக்கப்படும் அலுவலர்களும், அதிகாரிகளும் சென்னையிலேயே வசித்து வருகின்றனர்.
அலுவலகத்தை இடம் மாற்றினால், அவர்களுக்கு அலைச்சல் ஏற்படும் என்ற காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கை கிடப்பில் போடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களின் நலன் கருதி, நந்தனத்தில் இயங்கி வரும் வேளாண்மை உப கோட்ட பொறியியல் அலுவலகத்தை, விவசாயம் அதிகமுள்ள திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில், வேளாண்மை உபகோட்ட பொறியியல் அலுவலகம் அமைக்க இடம் கேட்டு, வருவாய்த் துறையிடம் மனு அளித்துள்ளோம். இடம் கிடைத்தவுடன், அலுவலகம் கட்டப்படும். தற்காலிகமாக அலுவலகம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கோட்ட செயற்பொறியாளர், சென்னை.
சென்னை, நந்தனத்தில் உள்ள வேளாண்மை உப கோட்ட பொறியியல் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக செல்ல திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பண விரயம், நேர விரயம் மட்டுமின்றி, வாகன மானியங்கள் குறித்து அறிந்துகொள்ள முடியவில்லை. நந்தனத்தில் உள்ள அலுவலகத்தை, திருக்கழுக்குன்றத்திற்கு மாற்ற, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.நடராஜன்,
விவசாயி,நரப்பாக்கம், செங்கல்பட்டு