/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?
/
திருப்போரூர் பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?
ADDED : மார் 14, 2024 07:56 PM

திருப்போரூர்:திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலையை ஒட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், திருப்போரூர், தண்டலம், சிறுதாவூர், மடையத்துார் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, 1,000க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மேலும், பொதுத்தேர்வு எழுதும் மையமாக இருப்பதால், சுற்றுவட்டார தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு எழுத வருகின்றனர்.
இந்த சாலை வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இவை அசுர வேகத்தில் செல்வதால், பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள், சாலையைக் கடக்கும்போது, வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இப்பகுதியில், பள்ளி இருக்கும் பகுதி என்பதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை, சாலையில் வெள்ளைக் கோடுகள், வேகத்தடைகள் ஆகியவை அமைக்கபடவில்லை.
அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், மாணவர்கள் சாலையைக் கடப்பதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

