/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது மின்சாரம் பாய்ந்து 'ஒயர்மேன்' பலி
/
பொது மின்சாரம் பாய்ந்து 'ஒயர்மேன்' பலி
ADDED : மே 14, 2025 12:54 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த கோட்டைபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 58.
அச்சிறுபாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், ஒயர்மேன் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, அச்சிறுபாக்கம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன், மழை பெய்தது.
இதனால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால், அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அச்சிறுபாக்கம் பழத்தோட்டம் மூன்றாவது தெரு பகுதியில், நீண்ட நேரமாக மின்சாரம் தடைபட்டுள்ளது. இதை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள், மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதன்படி ஒயர்மேன் ராஜேந்திரன், அச்சிறுபாக்கம் பழத்தோட்டம் பகுதிக்கு, மாலை 6:00 மணியளவில் சென்று, மின்மாற்றியில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இரவு 9:00 மணி வரை, இவரது சடலம் அங்கேயே கிடந்துள்ளது.
ராஜேந்திரன் நீண்ட நேரமாக அலுவலகத்திற்கு வராததால், சந்தேகமடைந்து மின்வாரியத் துறையினர், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்தது தெரிந்தது.
இதுகுறித்து, அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து உடல், அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.