/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காணும் பொங்கல் பண்டிகையால்...விழாக்கோலம் !:சுற்றுலா பகுதிகளில் கூட்டம் கூடி குதூகலம்
/
காணும் பொங்கல் பண்டிகையால்...விழாக்கோலம் !:சுற்றுலா பகுதிகளில் கூட்டம் கூடி குதூகலம்
காணும் பொங்கல் பண்டிகையால்...விழாக்கோலம் !:சுற்றுலா பகுதிகளில் கூட்டம் கூடி குதூகலம்
காணும் பொங்கல் பண்டிகையால்...விழாக்கோலம் !:சுற்றுலா பகுதிகளில் கூட்டம் கூடி குதூகலம்
ADDED : ஜன 18, 2024 01:10 AM

காணும் பொங்கல் நாளில், மாமல்லபுரம் சிற்பங்கள், முட்டுக்காடு படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், விழாக்கோலமாக காட்சி அளித்தன.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, மாமல்லபுரம் சிற்பங்களை காண, கடந்த இரண்டு நாட்கள் பயணியர் குவிந்தனர்.
காணும் பொங்கல் நாளில், காலை 9:00 மணியிலிருந்தே, பயணியர் வர துவங்கி, பின் பல்லாயிரமாக திரண்டனர்.
கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு, குடவரை சிற்பங்கள், கலங்கரை விளக்கம், கடற்கரை ஆகிய பகுதிகளில், குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள் என, கூட்டம் அலைமோதியது.
சிற்பங்களை ரசித்து, சிற்பங்களின் முன் நின்று, புகைப்படம் எடுத்து, குன்றுகளில் உலவி மகிழ்ந்தனர்.
இவர்களால், கடைகளில், நடைபாதை வியாபாரிகளிடம், கைவினைப் பொருட்கள், குளிர்பானம், தேநீர், நொறுக்குத் தீனிகள், உணவு உள்ளிட்ட வியாபாரம் களைகட்டியது. மாலை சுற்றுலா முடித்து, அவரவர் பகுதிக்கு திரும்ப துவங்கினர்.
மாமல்லபுரம், பிற பகுதிகள் போலீசார், சிற்ப பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில், பயணியர் பாதுகாப்பிற்காக கண்காணித்தனர்.
பயணியர் கடலில் இறங்குவதை, குளிப்பதை தடுக்க, கடற்கரையில் சவுக்குத்தடுப்பு அமைக்கப்பட்டது, கடலில் இறங்க முயன்ற பயணியரை, போலீசார் எச்சரித்தனர்.
கோவளம் அடுத்த முட்டுக்காடு மற்றும் முதலியார்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு குழாமில் சுற்றுலா பயணியர் குவிந்தனர். குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
வண்டலுார் உயிரியல் பூங்காவில், நேற்று காலை 11:00 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்தது.
நேற்று மட்டும், 23,000 பேர், பூங்காவை கண்டு ரசித்தனர். மூன்று நாட்களில், 63,000 பேர் வந்துள்ளனர்.
தவிர, வங்க தேசம், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உட்பட பல நாடுகளில் இருந்து வேடந்தாங்கலுக்கு வலசை வந்துள்ள பறவைகளை காணவும், பயணியர் குவிந்தனர்.
வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் உட்பட 31 வகையான பறவைகளை, குடும்பத்தினர் பார்த்தனர்.
பொழுதுபோக்கு மையங்களான முட்டுக்காடு எம்.ஜி.எம்., தட்சிணாசித்ரா அருங்காட்சியகம், கானத்துார் மாயாஜால், ஏகாட்டூர் மெரினாமால் போன்றவற்றிலும் சுற்றுலா பயணியர் குவிந்தனர்.
திருப்போரூர் கந்தசுவாமி உட்பட பல கோவில்களில் காலை முதலே பக்தர்கள் வந்து, சுவாமியரை தரிசித்து சென்றனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு பயணியர் செய்வதற்காக, விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில், வண்டலுார், மாமல்லபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
காணும் பொங்கலை முன்னிட்டு குன்றத்துார் சுப்பிரமணியசாமி கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் குடும்பத்துடன் பலர் ஏரியை கண்டு ரசித்து சென்றனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, மாவட்டம் முழுதும் அந்தந்த பகுதிகளில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர, ஆட்டம், பாட்டம் என, கலை நிகழ்ச்சிகள் களைகட்டின.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் குவிந்த கூட்டம், பொங்கல் பண்டிகையை விழாக்கோலமாக மாற்றியது.
- நமது நிருபர் குழு -