ADDED : ஆக 06, 2025 11:23 PM
வண்டலுார்,:வண்டலுாரில், ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்த பெண், புல்லட் பைக் மோதி உயிரிழந்தார்.
வண்டலுார் அடுத்த முடிச்சூர், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி, 53. இவர், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு பணிக்காக வீட்டிலிருந்து கிளம்பியவர், வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்துள்ளார்.
அப்போது இரவு 9:45 மணியளவில், சாலையில் வேகமாக வந்த ராயல் என்பீல்ட் புல்லட் பைக், மகாலட்சுமி மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலட்சுமி மற்றும் பைக்கை ஓட்டி வந்த சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் அகீல், 22, ஆகியோரை அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், மகாலட்சுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. அப்துல் அகீல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, மகாலட்சுமி உடலை மீட்ட தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் உடலை ஒப்படைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.