/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு சிலாவட்டத்தில் பணிகள் துவக்கம்
/
திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு சிலாவட்டத்தில் பணிகள் துவக்கம்
திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு சிலாவட்டத்தில் பணிகள் துவக்கம்
திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு சிலாவட்டத்தில் பணிகள் துவக்கம்
ADDED : ஏப் 10, 2025 08:01 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி, தார்ப்பாய்களால் மூடி பாதுகாக்கும் வகையில், திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, தமிழ்நாடு வாணிப கழகத்தின் வாயிலாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ள நிலையில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இவற்றில், 65,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டது. நெற்பயிர் விளைந்து, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
அவ்வாறு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், சிலாவட்டத்தில் உள்ள, 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சிலாவட்டத்தில் உள்ள கிடங்குகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், படாளம் சர்க்கரை ஆலையில் உள்ள கிடங்குகளில் நெல்முட்டைகள் பாதுகாக்கும் பணி நடந்தது. தற்போது, இந்த கிடங்குகளும் நிரம்பியுள்ளன.
இதையடுத்து, சிலாவட்டத்தில், திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், லாரிகள் வாயிலாக சிலாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
அங்கு தரைப்பகுதியில், நெல் மூட்டைகள் வீணாகாதவாறு கற்கள் மற்றும் சவுக்கு கட்டை அடுக்கப்பட்டு, நெல் மூட்டைகளை பாலித்தீன் தார்ப்பாய்களால் மூடி பாதுகாக்கும் பணி, நேற்று துவங்கியது.
பாதுகாப்பு
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்தன. அதனால், திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டது.
அதனால், 20,000 மெட்ரிக் டன் நெல் முட்டைகள் பாதுகாக்கப்படும். பின், லாரிகள் வாயிலாக, தென் மாவட்டங்களில் உள்ள அரவை 'மில்'களுக்கு, செங்கல்பட்டில் இருந்து ரயில்களில் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
- நெல் கொள்முதல் நிலைய அதிகாரி.

