/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதவி பொறியாளர் அலுவலகங்கள் புதிதாக அமைத்தும் பணிகள் மந்தம்
/
உதவி பொறியாளர் அலுவலகங்கள் புதிதாக அமைத்தும் பணிகள் மந்தம்
உதவி பொறியாளர் அலுவலகங்கள் புதிதாக அமைத்தும் பணிகள் மந்தம்
உதவி பொறியாளர் அலுவலகங்கள் புதிதாக அமைத்தும் பணிகள் மந்தம்
ADDED : நவ 10, 2025 11:11 PM

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டத்தில், 13 மின்வாரிய உதவி பொறியாளர் பிரிவு அலுவலகங்கள் புதிதாக துவக்கப்பட்டும், போதிய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இல்லாததால், மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட மின் வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மறைமலை நகர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய மின் கோட்டங்கள் உள்ளன.
இந்த கோட்டங்களின் கீழ், மின் வாரிய உதவி பொறியாளர் பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு 25,000 மின் இணைப்புகளுக்கு ஒரு மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் என அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள், வணிக கட்டங்கள், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு ஏற்ப மறைமலை நகர் மின் கோட்டத்தில் ஒன்பது இடங்களிலும், செங்கல்பட்டில் மூன்று இடங்களிலும், மதுராந்தகத்தில் ஒரு இடத்திலும் என, 13 இடங்களில் மின் உதவி பொறியாளர் அலுவலகங்கள் திறக்க வேண்டும் என, 2018ம் ஆண்டு மின் வாரிய அதிகாரிகள் அறிக்கை தயாரித்து, மின் வாரிய தலைவருக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, கடந்த மே மாதம் 13 மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.
புதிதாக அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும், போதிய அளவில் மின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இல்லாததால், மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல், பழைய நிலையே தொடர்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின் கம்பி அறுந்து விழுந்து கால்நடைகள் உயிரிழப்பு, தாழ்வாக செல்லும் மின் கம்பியில் வாகனம் மோதி தீப்பற்றி எரிவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், பொத்தேரி பகுதியில் வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியில் பட்டு, கல்லுாரி மாணவரின் கை சேதமடைந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுவது, மின் பாதைகளில் உள்ள செடிகளை அகற்றுவது, புதிய மின் மாற்றிகள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெறவில்லை.
இதன் காரணமாக அடிக்கடி மின்தடை, குறைந்த மின் அழுத்தம் போன்ற காரணங்களால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சிறு மழைக்கே பல்வேறு கிராமங்களில், பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. புதிதாக உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும், இருக்கின்ற ஊழியர்களை வைத்தே பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிய வேண்டிய உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில், 5க்கும் குறைவான மின் ஊழியர்களே உள்ளனர்.
இதுகுறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:
கிராமங்களில் இடையூறாக உள்ள மின் கம்பங்கள், மின் கம்பிகளை மாற்றியமைப்பது போன்ற காரணங்களுக்கு முறையாக அனுமதி பெற்று சென்றாலும், அதிகாரிகள் பல மாதங்கள் இழுத்தடிக்கும் நிலை உள்ளது.
மேலும், பணிகளுக்குத் தேவையான 'பொக்லைன்' இயந்திரம், கிரேன் இயந்திரம், மின் கம்பம் ஏற்றி வரும் வாகனங்கள் போன்றவற்றை உள்ளாட்சி பிரதிநிதிகளே சொந்த செலவில் ஏற்படுத்தி தரும் நிலை ஏற்பட்டு வருகிறது.
பல மின் உதவி பொறியாளர்கள், புறநகரில் உள்ள கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளதாக உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதி புதிய மின் மாற்றிகளை வாங்கி, தனியார் வணிக கட்டடங்கள், தனியார் மருத்துவமனை, திருமண மண்டபங்களுக்கு மின் மாற்றியை பொருத்தி விடுகின்றனர்.
இதனால், புறநகர் பகுதிகளில் பல கிராமங்களில் மின் தடை பிரச்னை தீர்க்கப்படவில்லை. வருமானம் உள்ள ஊராட்சிகளின் பணிகள் விரைவில் முடிக்கப்படுகின்றன.
அதற்கான செலவுகளை கிராம சபை கூட்டங்களில் கணக்கு காட்டும் போது, வீண் விவாதங்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

