/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் 'காப்பாற்ற.. ரூ.20 கோடி பேரம்! மும்பை சம்பவத்திலும் பாடம் படிக்காத அலட்சியம் சென்னை, புறநகரில் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்
/
விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் 'காப்பாற்ற.. ரூ.20 கோடி பேரம்! மும்பை சம்பவத்திலும் பாடம் படிக்காத அலட்சியம் சென்னை, புறநகரில் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்
விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் 'காப்பாற்ற.. ரூ.20 கோடி பேரம்! மும்பை சம்பவத்திலும் பாடம் படிக்காத அலட்சியம் சென்னை, புறநகரில் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்
விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் 'காப்பாற்ற.. ரூ.20 கோடி பேரம்! மும்பை சம்பவத்திலும் பாடம் படிக்காத அலட்சியம் சென்னை, புறநகரில் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்
ADDED : மே 29, 2024 11:49 PM

சென்னை மற்றும் புறநகரில், பிரதான சாலைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள், பலகைகளுக்கு மாநகராட்சியில் முறையான அனுமதி பெற, இடைத்தரகர்கள் வாயிலாக, 20 கோடி ரூபாய் வரை பேரம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அப்பாவி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் பொது இடங்கள், தனிநபர் கட்டடங்களில் விளம்பர பதாகைகள், பலகைகள் வைக்க தடை உள்ளது. அதேநேரம், 2023ல் கொண்டு வரப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி விதியில், அனுமதி பெற்று விளம்பர பதாகைகள், பலகைகள் அமைக்கலாம் என அரசு உத்தரவிட்டது. இதற்கு மாற்றாக, சொத்துவரி உள்ளிட்டவற்றை கருதாமல் வெறும் வருவாயை மட்டும் கருத்தில் வைத்து பிறப்பித்த உத்தரவால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இதன்படி, அதிகபட்சமாக, 40 அடி அகலம், 20 அடி உயரத்தில் விளம்பரப் பலகை அமைக்கலாம். ஆனால், பெரும்பாலான விளம்பரப் பதாகைகள் சாலையின் அகலம் மற்றும் இடத்தின் அகலத்தை மீறி அமைக்கப்பட்டுள்ளன.
உரிய விதிமுறைகள், பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்படாததால், சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், இதுவரை அனுமதி கடிதம் வழங்கவில்லை.
14 பேர் பலி
சமீபத்தில், மும்பையில் ஏற்பட்ட புழுதிப்புயலில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து, 14 பேர் உயிரிழந்தனர். இதில் நான்கு பேரின் உடல்களை மீட்கக்கூட முடியாத அளவில் சிதைந்தன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 2,000 பேனர்கள், விளம்பரப் பலகைகள் குறித்து, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிடப்பட்டது. இதனால், மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை சுட்டிக்காட்டி, அகற்றப்பட வேண்டிய விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பர பேனர்களை அடையாளம் காட்டும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கடிதம் அனுப்பி இருந்தார்.
அதில், சென்னையில் மட்டுமே அனுமதியின்றி 446 பேனர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், 'எந்த விளம்பர பலகைகளையும் அகற்றத் தேவையில்லை; அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என நம்பிக்கை அளித்து, கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாயிலாக இடைத்தரகர்கள் பேரம் நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புரோக்கர்கள் தீவிரம்
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து ராட்சத விளம்பரப் பதாகைகள், பலகைகளுக்கும் அனுமதி பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி அனுமதி பெறும் நடவடிக்கையில், 50க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விளம்பர பேனர்களுக்கு, விதிமுறைப்படி 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 6,000 ரூபாய் மட்டுமே அனுமதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், அரசியல் கட்சியினர், கவுன்சிலர்கள், அதிகாரிகளை கவனிக்க, விளம்பர நிறுவனங்களிடம், 15 முதல் 20 கோடி ரூபாய் வரை, இடைத்தரகர்கள் பேரம் பேசி வருகின்றனர்.
குறிப்பாக, அண்ணா சாலையில் விளம்பர பதாகை, பலகைகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக, பெரிய தொகை பேரமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த பேரத்தில் சுமூக தீர்வு ஏற்பட்டால், வரும் ஜூன் மாத இறுதிக்குள், சென்னை மாநகராட்சியில் மட்டும், 200க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள், பலகைகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
கட்சியினர், அதிகாரிகளை வளைக்கும் இடைத்தரகர்களால், அடுத்தடுத்த மாதங்களில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, பேனர் கலாசாரம் தலைதுாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மழைக்காலங்களில் மட்டுமின்றி பொதுவாகவே அப்பாவி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜூன் முதல்...
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
விளம்பரப் பதாகைகள், பலகைகள் முறைப்படி அமைத்திருந்தால், உரிய அனுமதி சான்று வழங்கப்படும். அவ்வாறு அமைக்கப்படாத விளம்பர பதாகைகள், அகற்றப்பட்டு வருகின்றன.
விதிமீறிய விளம்பரப் பதாகைகள், பலகைகளுக்கு அனுமதி வழங்க பேரம் நடப்பதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை. அவ்வாறு இருந்தால், முறைப்படி மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.
அனுமதி கோரிய விளம்பரப் பதாகைகள், பலகைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள், விதிகளுக்கு உட்பட்டிருந்தால், ஜூன் மாதத்திற்குப் பின் அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் அலட்சியம்
திருமழிசை - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோர உயரமான கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது மற்றும் மொபைல் போன் 'டவர்'கள் வைப்பது அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதியில் இருப்போருக்கும், சாலையில் செல்வோருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.
எம்.மாரியப்பன், 55,
திருமழிசை.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகள் வளர்ந்து வரும் பகுதிகளாக மாறியுள்ளன. இப்பகுதிகளில், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரமாண்ட பேனர்கள் அதிகரித்து உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையாக அனுமதி பெற்று, 'அனுமதி எண்' பேனரில் இடம்பெறச் செய்ய வேண்டும் என, நீதிமன்ற உத்தரவு இருந்தும், அரசியல்வாதிகள் தலையீட்டால் விதிமீறல் பேனர்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
- து.மாரியப்பன், 75, மறைமலை நகர்.
மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ள கட்டட உரிமையாளர்களுக்கு, எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கியுள்ளோம். விரைவில் அரசு அனுமதியுடன் கட்டணம் வசூலிக்கப்பட்டு, விளம்பர பேனர்கள் வைக்க பரிந்துரைக்கப்படும்.
- வெங்கடேசன்
பேரூராட்சி செயல் அலுவலர், திருமழிசை.
- நமது நிருபர் -