/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் இணைப்பு இல்லாமல் குடிநீர் பெறும்... 13,500 வீடுகள்! 'டிபாசிட்' தொகை செலுத்த மாநகராட்சி உத்தரவு
/
தாம்பரத்தில் இணைப்பு இல்லாமல் குடிநீர் பெறும்... 13,500 வீடுகள்! 'டிபாசிட்' தொகை செலுத்த மாநகராட்சி உத்தரவு
தாம்பரத்தில் இணைப்பு இல்லாமல் குடிநீர் பெறும்... 13,500 வீடுகள்! 'டிபாசிட்' தொகை செலுத்த மாநகராட்சி உத்தரவு
தாம்பரத்தில் இணைப்பு இல்லாமல் குடிநீர் பெறும்... 13,500 வீடுகள்! 'டிபாசிட்' தொகை செலுத்த மாநகராட்சி உத்தரவு
ADDED : ஆக 20, 2024 12:07 AM

தாம்பரம், :குடிநீர் இணைப்பு இல்லாத 13,500 வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் நடவடிக்கையில், தாம்பரம் மாநகராட்சி களமிறங்கி உள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு வீட்டின் உரிமையாளர்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அளித்து, டிபாசிட் தொகை கட்ட அறிவுறுத்தி வருகிறது.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன், தலா ஐந்து நகராட்சி, பேரூராட்சிகளை இணைத்து, 70 வார்டுகளுடன் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது; ஐந்து மண்டலங்கள் உள்ளன.
மாநகராட்சி பகுதிகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பழைய சீவரம், மேலச்சேரி, வில்லியம்பாக்கம் பகுதி பாலாறு படுகை ஆழ்துளை கிணறுகளில் இருந்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அதேபோல், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் ஆதாரமான கிணறுகளின் தண்ணீரை சுத்திகரித்து வினியோகிக்கப்படுகிறது. மாநகராட்சியாக உயர்த்துவதற்கு முன், ஐந்து நகராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. அப்போது, ஒவ்வொரு நகராட்சியிலும் 'டிபாசிட்' தொகை வசூலிக்கப்பட்டது.
தனி வீடு என்றால் டிபாசிட் மற்றும் சாலை பராமரிப்பு, மேற்பார்வை கட்டணம் வசூலிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, அங்குள்ள வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 1, 2, 3 இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், தனி வீட்டிற்கான 'டிபாசிட்' தொகை, சாலை பராமரிப்பு, மேற்பார்வை கட்டணமே வசூலிக்கப்பட்டது.
அந்த ஒரு இணைப்பில் இருந்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு, தண்ணீர் தேவை உள்ளிட்ட விபரங்களை மாநகராட்சி கணக்கெடுத்தது.
இதையடுத்து, நகராட்சியாக இருந்தபோது வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் குடிநீர் இணைப்பை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது.
அந்த வகையில், கணக்கெடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து வீட்டுதாரர்களும், குடிநீர் இணைப்புக்கான 'டிபாசிட்' தொகை கட்ட வேண்டும் என, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தனி வீடு என்றாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் என்றாலும், ஒவ்வொரு வீட்டிற்கும் டிபாசிட் மற்றும் சாலை பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும். மாதக் கட்டணத்தையும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டும்.
தனி வீடுகளில் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு இணைப்பில் பல குடும்பங்கள் பயனடைகின்றன. இதை தடுக்கவும், மாநகராட்சிக்கு வருவாய் பெருக்கவும், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒரு டிபாசிட் வாங்கப்பட்டது. இனி, நான்கு வீடுகளுக்கு ஒரு இணைப்பு தரப்படும்; நால்வரும் தனித்தனியாக டிபாசிட் தொகை தரவேண்டும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு இணைப்புக்கு கட்டப்பட்ட டிபாசிட் தொகையை, தற்போதைய தொகையுடன் ஒப்பிட்டு, இடைப்பட்ட கட்டணத்தையும் கட்டவும் குறுஞ்செய்தி வாயிலாக அறிவுறுத்தி வருகிறோம்; தவணை முறையிலும் இத்தொகையை கட்டலாம்.
டிபாசிட் கட்டாத வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வரி, பாதாள சாக்கடை கட்டணத்தை செலுத்த முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் இணைப்புக்கு டிபாசிட் கட்டுமாறு குறுஞ்செய்தி வருவதை பார்த்து, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் எழுந்துள்ளது.
மறுபரிசீலனை செய்யப்படுமா?
ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டு வரி வசூல் செய்கின்றனர். அதில், 3 சதவீதம், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பிரிக்கப்படுகிறது. நகராட்சி சட்ட விதிகளில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை எதிர்கால குடிநீர் திட்டம், மேம்பாடு திட்டத்திற்கு பயன்படுத்துவதாக சட்டத்தில் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைத்து வீட்டுதாரர்களும் டிபாசிட் கட்ட வேண்டும் என்பது என்ன நியாயம். இதை, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
- சி.முருகையன், செயலர்,
2 - 3 மண்டல குடியிருப்போர்
நலச்சங்க இணைப்பு மையம்.