/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னையில் 32 துாண்டில் வளைவுகளும் சேதம் பேராபத்து! மழை காலத்தில் 22 கிராமங்கள் பாதிக்கும் அபாயம்
/
வடசென்னையில் 32 துாண்டில் வளைவுகளும் சேதம் பேராபத்து! மழை காலத்தில் 22 கிராமங்கள் பாதிக்கும் அபாயம்
வடசென்னையில் 32 துாண்டில் வளைவுகளும் சேதம் பேராபத்து! மழை காலத்தில் 22 கிராமங்கள் பாதிக்கும் அபாயம்
வடசென்னையில் 32 துாண்டில் வளைவுகளும் சேதம் பேராபத்து! மழை காலத்தில் 22 கிராமங்கள் பாதிக்கும் அபாயம்
ADDED : ஆக 05, 2024 12:45 AM

திருவொற்றியூர், க டல் சீற்றத்தை தடுக்கும் வகையில், வடசென்னை பகுதியில் அமைக்கப்பட்ட 32 துாண்டில் வளைவுகளும் சேதமடைந்துள்ளன. வரும் பருவமழைக்குள் இவற்றை சீரமைக்காவிட்டால், கடலோர மீனவ கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும் என, மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை, திருவொற்றியூர், எண்ணுார் சுற்றுப்பகுதியில் மொத்தம் 22 மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, கடல் சீற்றம், புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது, வடசென்னையின் மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன; வீடு, படகுகள், வலைகள் சேதங்களால், மீனவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
இதற்கு தீர்வாக, அலையின் வேகத்தை குறைக்கும் வகையில், துாண்டில் வளைவுகள் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, சுனாமிக்கு முன், செரியன் நகர் - பாரதியார் நகர் வரையிலான கடல் பகுதியில், அரை கி.மீ., துாரம் முதல் 1 கி.மீ., துாரத்திற்கு, ராட்சத பாறாங்கற்கள் போடப்பட்டு, நேர்வாக்கிலான துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 13 இடங்களில் துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து, 2017ம் ஆண்டு, எண்ணுாரின் நெட்டுகுப்பம் முதல் தாழங்குப்பம் கடற்கரை வரை கடல் பகுதியில், 31.82 கோடி ரூபாய் செலவில், 10 இடங்களில் துாண்டில் வளைவுகள் கட்டமைக்கப்பட்டன.
கடல் அரிப்பு
இதில், ஆங்கில எழுத்தான 'டி' வடிவில் அமைக்கப்பட்ட இரு துாண்டில் வளைவுகளால், கடல் சீற்றத்தின் போது ஏற்படும் பேரலைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த துாண்டில் வளைவுகள், 240 அடியில் இரண்டு, 120 அடியில் இரண்டு, 60 அடியில் இரண்டு என மொத்தம் ஆறு படிநிலைகளில், வெவ்வேறு அளவுடைய பாறாங்கற்கள் போடப்பட்டு, நீள் வாக்கில் அமைக்கப்பட்டன.
மேலும் 2019 - 20ல், தாழங்குப்பம் - சின்னகுப்பம் கடற்கரை வரை, 38 கோடி ரூபாய் செலவில், ஒன்பது இடங்களில் துாண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, படிநிலைகளை அதிகரித்து, மாற்று வடிவில் துாண்டில் வளைவு அமைக்கும்படி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, சின்னகுப்பம் கடற்கரையையொட்டி, 15வது துாண்டில் வளைவு, 350 அடி துாரத்திற்கும், 16வது துாண்டில் வளைவு, 450 அடி துாரத்திற்கும் பாறாங்கற்கள் போடப்பட்டு, கடைசியில் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் 'துாண்டில் முள்' போல் துாண்டில் வளைவு அமைக்கப்பட்டது.
இந்த வளைவால், கடல் சீற்றம், மண் அரிப்பு, சாலை அரிப்பு ஆகியவை தடுக்கப்பட்டன. இந்நிலையில், 'கஜா, வர்தா, நிவர், ஒக்கி' என, அடுத்தடுத்த புயல்களால், மேற்கண்ட 32 துாண்டில் வளைவுகளும் சேதமடைந்துள்ளன.
இதனால், முன்பைவிட கடல் அலையின் சீற்றம் அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக, பவுர்ணமி, அமாவாசை தினங்களில் ஏற்படும் சாதாரண கடல் சீற்றத்திற்கே, தாழங்குப்பம் கடற்கரை ஒட்டிய தார்ச்சாலையில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் வீடுகளும் பாதிக்கப்படுகின்றன.
துாண்டில் வளைவு சேதமடைந்துள்ளதால், வரும் பருவமழைக்கு ஆழ்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், சூறாவளி போன்ற பேரிடர்களால் கடலில் சீற்றம் அதிகரித்து, வடசென்னை மீனவ கிராமங்களை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, உருக்குலைந்து காணப்படும் 32 துாண்டில் வளைவுகளையும், பருவமழைக்கு முன்னதாக, சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு முன்வருமா?
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
'டி' மற்றும் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் 'துாண்டில் முள்' வடிவ துாண்டில் வளைவுகளால், அலையின் சீற்றம் ஆழ்கடலிலேயே தணிக்கப்பட்டு, கரைக்கு வரும்போது பெரிய அளவிலான கடல் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாது.
மேலும், புயல், கடல் சீற்றம், காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளி, அதிகனமழையின் போது, ஆழ்கடலுக்கு சென்ற படகுகள், இந்த துாண்டில் வளைவுகளுக்குள் வந்துவிட்டால், சேதம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
துாண்டில் வளைவுகளால், கடற்கரைகளில் மணல் திட்டுகள் உருவாகும். அங்கு, மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். அதற்கேற்ப, சேதமடைந்த துாண்டில் வளைவுகளை சீரமைக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், எர்ணாவூர் குப்பம் - நேதாஜி நகர் வரையிலான கடல் பகுதியில், புதிதாக துாண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.