/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள பாதிப்பை தவிர்க்க ஒக்கியம்மடு விரிவாக்கம் 250 - 620 அடியாகிறது! மெட்ரோ ரயில் பாதையுடன் சேர்த்து முடிக்க ஆயத்தம்
/
வெள்ள பாதிப்பை தவிர்க்க ஒக்கியம்மடு விரிவாக்கம் 250 - 620 அடியாகிறது! மெட்ரோ ரயில் பாதையுடன் சேர்த்து முடிக்க ஆயத்தம்
வெள்ள பாதிப்பை தவிர்க்க ஒக்கியம்மடு விரிவாக்கம் 250 - 620 அடியாகிறது! மெட்ரோ ரயில் பாதையுடன் சேர்த்து முடிக்க ஆயத்தம்
வெள்ள பாதிப்பை தவிர்க்க ஒக்கியம்மடு விரிவாக்கம் 250 - 620 அடியாகிறது! மெட்ரோ ரயில் பாதையுடன் சேர்த்து முடிக்க ஆயத்தம்
ADDED : ஆக 28, 2024 11:56 PM

தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தவிர்க்க, 250 அடி அகலம் உடைய ஓ.எம்.ஆர்., ஒக்கியம்மடுவை, 620 அடி விரிவாக்கம் செய்யும் பணி துவங்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லுாரில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பாதை பணியுடன் சேர்த்து, இத்திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தென் சென்னை புறநகர் பகுதியில் உள்ள, 62 ஏரிகள், 200க்கும் மேற்பட்ட குளங்கள், வடிகால் மற்றும் கால்வாய்கள் உள்ளன.
ஒவ்வொரு பருவமழையின்போதும், இவற்றில் இருந்து வெளியேறும் மழைநீர், துரைப்பாக்கம், ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் சேர்கிறது.
ஆய்வு
அகலம் 250 அடியாக உள்ள ஒக்கியம் மடுவில், ஆகாயத்தாமரை அதிகளவில் இருந்ததால், கடந்தாண்டு நவ., மாதம் 'மிக்ஜாம்' புயல் மழையில் நீரோட்டம் தடைபட்டது. இதனால், வேளச்சேரி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கினர்.
இதையடுத்து அமைச்சர்கள் நேரு, கணேசன் மற்றும் அப்போதைய தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், ஒக்கியம் மடு பகுதியை ஆய்வு செய்தனர்.
அப்போது, மடுவை விரிவாக்கம் செய்தால் மட்டுமே, ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டது.
தொடர்ந்து, டிச., 16ம் தேதி, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில், ஒக்கியம் மடுவை ஆய்வு செய்தார்.
இதில், 450 மீட்டர் துார கரை பகுதியில் சாலை அமைத்து, ஒக்கியம் மடுவை ஆக்கிரமித்தது, வெள்ள பாதிப்புக்கு ஒரு காரணம் என்பது தெரியவந்தது. ஆக்கிரமிப்பாக 250 மீட்டர் மண் சாலை, 200 மீட்டர் சிமென்ட் சாலை இருந்தது.
இவற்றை உடனடியாக அகற்றி, ஒக்கியம் மடுவை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணி, டிச., 28ல் துவங்க இருந்தது. ஒக்கியம் மடு கரையை ஆக்கிரமித்து சாலையாக பயன்படுத்தும்
நிறுவனம், அதன் அருகே உள்ள பட்டா நிலத்தில் மாற்று சாலை அமைக்க, 15 நாட்கள் அவகாசம் கேட்டது. நீர்வளத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு, ஜன., 15ல் மாற்று சாலை அமைக்கப்பட்டது.
ரூ.300 கோடி
எனினும், அரசியல் மற்றும் பல்வேறு அழுத்தம் காரணமாக, மடுவை விரிவாக்கம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சோழிங்க நல்லுார் மெட்ரோ ரயில் பாதை திட்டத்திற்கு, ஒக்கியம் மடுவில் துாண்கள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், மடுவை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைத்த அரசு, அதன் அகலத்தை விரிவாக்கம் செய்யும்படி வலியுறுத்தியது.
இதையடுத்து, தற்போதுள்ள 250 அடி அகலத்தை 620 அடியாக அகலமாக்கி, அதற்கு ஏற்ப துாண்கள் மற்றும் சாலை அமைக்க, மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு, 300 கோடி ரூபாயில் பணி மேற்கொண்டு வருகிறது.
நீர்வளத் துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையின் முக்கிய நீர்வழித்தடமாக ஒக்கியம் மடு உள்ளது. மடுவின் குறுக்கே மெட்ரோ ரயில் பாதைக்கான துாண்கள் அமைவதால், அதற்கு ஏற்ப மடு விரிவாக்கம், சாலையை கட்டமைக்க வேண்டி உள்ளது.
துாண்கள் அமைப்பதற்காக, மடுவில் மண் கொட்டி தரைத்தளம் பலப்படுத்தும் பணி நடக்கிறது. பருவமழைக்கு முன் இப்பணியை முடித்து, நீரோட்டத்திற்கு வசதியாக மடுவில் கொட்டிய மண் அகற்றப்படும்.
இதையடுத்து, வாகன போக்குவரத்துக்கு வசதியாக, வரும் ஜனவரியில் பணி துவங்கி, 2025 மே மாதத்திற்குள் இரும்பு தரைப்பால சாலை அமைக்கப்படும்.
அதன்பின், தற்போதைய சாலையை அகற்றி, துாண்கள் அமைத்து, அதோடு சேர்த்து நிரந்தர உயர்மட்ட தரைப்பால சாலை அமைக்கப்படும். இந்த பணி, 2026ம் ஆண்டு முடியும்.
இந்த பணிகள் முடிந்த பன், இரும்பு பால சாலையை அகற்றுவதா அல்லது அணுகு சாலையாக பயன்படுத்துவதா என, அப்போதைய சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவகாசத்தில் முடிக்க வேண்டும்
பல ஆண்டு கோரிக்கை விடுக்கப்படும் நிலையில், மெட்ரோ ரயில் பணியுடன் சேர்த்து ஒக்கியம் மடு விரிவாக்கம் செய்ய இருப்பது, சோழிங்கநல்லுார் தொகுதி மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும். சில பணிகள் பல்வேறு இடையூறால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. அதுபோல் இல்லாமல், மடு விரிவாக்கம் பணியை வேகமாக செய்து, குறிப்பிட்ட அவகாசத்தில் முடிக்க வேண்டும்.
- நலச்சங்க நிர்வாகிகள்,
சோழிங்கநல்லுார் தொகுதி
- நமது நிருபர் -