/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகால்களை துார்வாரும் பணிக்கு...ஆயத்தம்! மண்டலத்திற்கு தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
/
மழைநீர் வடிகால்களை துார்வாரும் பணிக்கு...ஆயத்தம்! மண்டலத்திற்கு தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
மழைநீர் வடிகால்களை துார்வாரும் பணிக்கு...ஆயத்தம்! மண்டலத்திற்கு தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
மழைநீர் வடிகால்களை துார்வாரும் பணிக்கு...ஆயத்தம்! மண்டலத்திற்கு தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
ADDED : மே 08, 2024 11:38 PM

சென்னையில், தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால்களை துார்வார, மாநகராட்சி ஆயத்தமாகி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் என, 7.50 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், 2,000 கி.மீ., மேல் உள்ள மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில், புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகாலை துார் வாரும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும், ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின்போதும், சென்னையில் வெள்ள பாதிப்பு தவிர்க்க முடியாததாக தொடர்ந்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழையால், மாநகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு கிடைக்காமல் தவித்தனர்.
குற்றச்சாட்டு
இதற்கு, எதிர்பாராத விதமாக அதிக அளவு மழை பெய்தது தான் காரணம் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மற்றொருபுறம், சென்னையின் வெள்ள பாதிப்புகளை தடுக்க அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகளை, மாநகராட்சி அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
குறிப்பாக, தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால்களை துார்வாரும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்ற, திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கோடைக்காலத்தை பயன்படுத்தி, மழைநீர் வடிகால்களை துார் வாரும் பணி, ஜூன் மாதம் முதல் துவங்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
கோடைக்காலத்தை பயன்படுத்தி, மழைநீர் வடிகால் துார்வாரும் பணியை, மாநகராட்சி துவங்க உள்ளது. அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 7.50 கோடி ரூபாய் மதிப்பில், முதற்கட்டமாக மழைநீர் வடிகால்கள் துார் வாரப்படும். வண்டல் மண், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை துார் வாரும் பணிகளுக்கு மட்டுமே, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை, தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக துார் வாரி முடிக்கப்படும். அதன்பின், வடகிழக்கு பருவமழைக்கு முன், மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகள் துார் வாரப்படும்.
தட்பவெப்ப நிலை மாற்றத்தால், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், எந்த அளவிற்கு பருவமழை பெய்யும் என்பது தெரியாது.
அதே நேரம், எந்த அளவு மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் அடையாறு, கூவம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், 1,387 கோடி ரூபாய் மதிப்பில், 406 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டன.
அறிவுறுத்தல்
தொடர்ந்து, கோவளம் மழைநீர் வடிகால் பணிகள், 1,714 கோடி ரூபாய் மதிப்பில், 360 கி.மீ., நீளத்திற்கும், கொசஸ்தலையாறு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், 3,220 கோடி ரூபாய் மதிப்பில், 769 கி.மீ., நீளத்திற்கும் நடந்து வருகின்றன.
இதில், கொசஸ்தலை யாறு வடிநிலை பகுதிகளில், 508 கி.மீ., பணிகள் முடிந்துள்ளன. மற்ற மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடிக்க, மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -