ADDED : ஏப் 18, 2024 12:21 AM

தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுதும் சிறப்பு பேருந்துகள் உட்பட, மொத்தம் 10,214 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.
நேற்று சென்னையில் இருந்து 684 பேருந்துகள் உட்பட, தமிழகம் முழுதும் 2,621 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் 17,000த்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். இதைத் தவிர தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையைப் பொறுத்தவரை விழா காலங்களைப் போல, தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட, ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக 1.20 லட்சம் பேர் வெளியூர் பயணம் செய்வர். நேற்று கூடுதலாக 50,000 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதேபோல், தேர்தலுக்கு முந்தைய நாளான இன்றும், சென்னையில் இருந்து 777 பேருந்துகள் உட்பட, தமிழகம் முழுதும் 2,692 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

