/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் கஞ்சா கடத்தல் 2 பெண்கள் சிக்கினர்
/
ரயிலில் கஞ்சா கடத்தல் 2 பெண்கள் சிக்கினர்
ADDED : செப் 15, 2024 12:20 AM
சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தில், சென்ட்ரல் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து, நேற்று முன்தினம் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, கேரளா எர்ணாகுளம் நோக்கி செல்லும் விரைவு ரயில், பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அதில் இருந்து இறங்கிய இரண்டு பெண்கள் மீது சந்தேகம் வரவே, அவர்களின் பைகளை சோதித்தனர். அதில், ஐந்து பண்டல்களில் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய். விசாரணையில், அவர்கள் ஈரோடு, வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த பிரக்ஞா, 30, மற்றும் உத்தர பிரதேசம், காசியாபாத்தைச் சேர்ந்த ருக்ஸானா காதுன், 20, என தெரியவந்தது. இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சகோதரர்கள் கைது
செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பிரவீன்குமார், 36. இவரது சகோதரர் பிரணவ்குமார், 33. இருவரும், பிரகாஷ், 34, என்பவருடன் சேர்ந்து, சுனாமி குடியிருப்பில் கஞ்சா வியாபாரம் செய்தனர். செம்மஞ்சேரி போலீசார், நேற்று, மூன்று பேரையும் கைது செய்தனர்.
தரமணி, கானகம் பகுதியை சேர்ந்த படேல்குமார், 24, உள்ளிட்ட ஐந்து பேரை, தரமணி போலீசார் கைது செய்தனர். பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன், 29, உள்ளிட்ட ஆறு பேரை, துரைப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கைது செய்த 14 பேரிடம் இருந்து, 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.