/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.200 கோடியில் சூரை மீன்பிடி துறைமுகம் ஜூன் இறுதியில் திறப்பதற்கு நடவடிக்கை
/
ரூ.200 கோடியில் சூரை மீன்பிடி துறைமுகம் ஜூன் இறுதியில் திறப்பதற்கு நடவடிக்கை
ரூ.200 கோடியில் சூரை மீன்பிடி துறைமுகம் ஜூன் இறுதியில் திறப்பதற்கு நடவடிக்கை
ரூ.200 கோடியில் சூரை மீன்பிடி துறைமுகம் ஜூன் இறுதியில் திறப்பதற்கு நடவடிக்கை
ADDED : மே 06, 2024 01:25 AM

திருவொற்றியூர்:சென்னை, காசிமேடில், 570 படகுகள் கையாளும் விதமாக, 1980ல் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டது. பின், 2,000 படகுகளை கையாளும் விதமாக விரிவாக்கம் செய்யப்பட்டும், இடப்பற்றாக்குறை நிலவியது.
தீர்வாக, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது, திருவொற்றியூர் குப்பத்தில், 200 கோடி ரூபாய் செலவில், சூரை மீன்பிடி துறைமுகம் கட்ட, அப்போதைய மீன்வள துறை அமைச்சர் ஜெயகுமார் அடிக்கல் நாட்டினார். அப்பணி, தற்போது வரை நடந்து வருகிறது.
மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடல் அலை உட்புகாமல் இருக்க, தென்கிழக்கு அலையை தடுக்கும் விதமாக, 2,801 அடி துாரம் தடுப்பு சுவர் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், வடகிழக்கு அலையை தடுக்கும் விதமாக, 1,815 அடி துாரம், பாறாங்கற்கள் மற்றும் கான்கிரீட் நட்சத்திரக் கற்கள் கொண்டு தடுப்பு சுவர் அமைத்து, கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும் முடிந்துள்ளது.
மேலும், 1,815 அடி துாரத்திற்கு, பெரிய மற்றும் சிறிய படகுகள் நிறுத்தப்படும் தளங்கள், ஓய்வறை, மீன்கள் ஏலக்கூடங்கள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, 85 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிந்துள்ளன. படகுகள் பழுது பார்ப்பு தளம் அமைக்கும் பணி மட்டும் விடுப்பட்டுள்ளது. விரைவில், அப்பணியையும் முடித்து, மீனவர்கள் பயன்பாட்டிற்கு துறைமுகம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
சூரை மீன்பிடி துறைமுகத்தின் பணிகள் முடியும்பட்சத்தில், 300 சிறிய படகுகள், 500 பெரிய படகுகள் என, 800க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்த முடியும்.
ஆண்டுக்கு, 60,000 டன் மீன்கள் கையாள முடியும். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இந்நிலையில், மார்ச் மாதம் இறுதிக்குள் பணிகள் முடியும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலால் சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு, தள்ளி போய் விட்டது.
ஜூன் மாதம் இறுதிக்குள், படகுகள் பழுது பார்ப்பு தளம் கட்டுமான பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மீன்வளத்துறை அதிகாரி கூறினார்.