/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி, கும்மிடி தடத்தில் 4 புதிய ரயில்கள் துவக்கம்
/
ஆவடி, கும்மிடி தடத்தில் 4 புதிய ரயில்கள் துவக்கம்
ADDED : மார் 04, 2025 12:14 AM
சென்னை, சென்னை - ஆவடி, கும்மிடிப்பூண்டி தடத்தில் நேற்று, நான்கு புதிய மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில்களின் சேவையில் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து புறநகருக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில், 'பீக் ஹவர்' எனப்படும் அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
எனவே, கூடுதல் மின்சார ரயில் சேவை துவங்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நான்கு புதிய மின்சார ரயில்சேவை அறிவித்தது.
அதன்படி, சென்ட்ரல் - ஆவடிக்கு காலை 11:15 மணி, ஆவடி - சென்ட்ரலுக்கு அதிகாலை 5:25 மணி, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10:35 மணி, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரலுக்கு காலை 9:10 மணிக்கும், நேற்று புதிய மின்சார ரயில்களின் சேவை துவங்கப்பட்டது.
இருப்பினும், இந்த ரயில்சேவையை நீட்டிப்பு செய்தும், நேரத்தையும் மாற்றிமையக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:
பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் மின்சார ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகிறோம் தற்போது, நான்கு புதிய மின்சார ரயில் சேவை துவங்குவதை வரவேற்கிறோம்.
அதே நேரம், சென்ட்ரல் - ஆவடி இடையே இயக்கப்படும் இரண்டு ரயில்களையும் திருவள்ளூர் வரை நீட்டித்து இயக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி தடத்தில் ஏற்கனவே ஓடிய நள்ளிரவு 12:15 மணி ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.