/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவீஸ்வரர் கோவிலை உயர்த்த 4 கடைகள் இடித்து அகற்றம்
/
ரவீஸ்வரர் கோவிலை உயர்த்த 4 கடைகள் இடித்து அகற்றம்
ADDED : ஆக 17, 2024 12:39 AM

வியாசர்பாடி, வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தொன்மையான ரவீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு வந்து சூரிய பகவான் சிவபெருமானை வணங்கியதால், மூலவர் ரவீஸ்வரர் என பெயர் பெற்றார்.
இக்கோவிலில், சூரிய கதிர்கள் ராஜகோபுரம் வழியாக நுழைந்து, நந்தி பகவான் வழியாக நேரடியாக மூலவர் சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. தற்போது சில ஆண்டுகளாக, இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை.
இதை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த போது, இக்கோவில், தரைதளத்தில் இருந்து, 5 அடி ஆழ பள்ளத்தில் இறங்கி உள்ளதால், சூரிய ஒளி சிவலிங்கம் மீது விழவில்லை என தெரிந்தது. கோவிலை உயர்த்துவது மட்டுமே இதற்கான தீர்வு என, தொல்லியல் துறை ஆய்வறிக்கை வழங்கியது. மேலும், மழைக் காலங்களில் கோவிலில், 5 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. முதியோர் கோவிலில் ஏறி, இறங்க முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
தற்போது கோவில் மூலவர், அம்மன், மகாமண்டபம், நந்தி, கொடிமரம், சண்டிகேஸ்வரர், ராஜகோபுரம் ஆகிய சன்னிதிகள், தரைதளத்தை விட 5 அடி ஆழ பள்ளத்தில் உள்ளதால், சன்னிதிகளை 'ஜாக்கி' உதவியுடன் உயர்த்த வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 1 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில், 'ஜாக்கி' வாயிலாக கோவிலை உயர்த்தி, மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த ஜூலையில் துவக்கி வைத்தார்.
தற்போது ரவீஸ்வரர் கோவிலை, ஜாக்கி வாயிலாக உயர்த்துவதற்கான முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, கோவிலையொட்டி இருந்த மூன்று பூஜை பொருட்கள் கடை மற்றும் நாட்டு மருந்து கடை உள்ளிட்ட நான்கு கடைகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
இக்கடைகள் இருந்த இடத்தில், பக்தர்களுக்கான மாற்று வழியும் அமைக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.