/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2வது மெட்ரோ வழித்தடத்தில் 50 இடங்களில் வணிக வளாகம்
/
2வது மெட்ரோ வழித்தடத்தில் 50 இடங்களில் வணிக வளாகம்
2வது மெட்ரோ வழித்தடத்தில் 50 இடங்களில் வணிக வளாகம்
2வது மெட்ரோ வழித்தடத்தில் 50 இடங்களில் வணிக வளாகம்
ADDED : ஆக 23, 2024 12:14 AM
சென்னை, ஆக. 23-
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பில், மொத்தம் 116 கி.மீ., துாரத்திற்கு, 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சிறுசேரி, பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் ஆகிய மூன்று தடங்களில், தற்போது மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் இயக்குவது மட்டுமின்றி, மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்று வழிகளில் வருவாய் திரட்ட, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோவில் ரயில் கட்டணம் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாய் திரட்டும் வகையில், நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், அடுத்தகட்டமாக மெட்ரோ நிலைய நுழைவு பகுதிகளை இணைத்து, வணிக பகுதிகளுக்காக ஒதுக்கி, பிரத்யேக வடிவமைப்புகளில் கட்டடங்கள் அமைக்கப்படும்.
தனியார் அலுவலகங்கள், கடைகள், 'ஷாப்பிங் மால்'கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வளாகங்கள் அமைக்க உள்ளோம்.
இதற்கான, 50 மெட்ரோ ரயில் நிலையங்களை தேர்வு செய்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வரும் 2028ல் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் போது, இந்த வணிக வளாகங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.