/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெசன்ட் நகர் கடற்கரையில் 50 கடைகள் அகற்றம் தி.நகர், மதுரவாயலிலும் அதிகாரிகள் அதிரடி
/
பெசன்ட் நகர் கடற்கரையில் 50 கடைகள் அகற்றம் தி.நகர், மதுரவாயலிலும் அதிகாரிகள் அதிரடி
பெசன்ட் நகர் கடற்கரையில் 50 கடைகள் அகற்றம் தி.நகர், மதுரவாயலிலும் அதிகாரிகள் அதிரடி
பெசன்ட் நகர் கடற்கரையில் 50 கடைகள் அகற்றம் தி.நகர், மதுரவாயலிலும் அதிகாரிகள் அதிரடி
ADDED : ஆக 04, 2024 12:29 AM

பெசன்ட் நகர்,
பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த வாகனங்கள், நடைபாதை மற்றும் கடற்கரையை ஆக்கிரமித்த கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
சென்னையில், மெரினா கடற்கரைக்கு அடுத்து, அதிக மக்கள் கூடும் கடற்கரையாக பெசன்ட் நகர் உள்ளது. இங்கு, 2013ல் மாநகராட்சி கணக்கெடுப்புபடி, 245 கடைகள் இருந்தன.
கடந்த 2021ல் மாநகராட்சி நியமித்த ஆர்.இ.பி.எல்., என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில்,645 கடைகள் இருந்தன.
கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின், 1,200 கடைகளாக அதிகரித்தன. பலர் கடைகளை, 25 அடி சுற்றளவாக விரிவுபடுத்தி உள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாலையில் இருந்து பார்த்தால் மணல், கடல்நீர் தெரியும். தற்போது, கண்ணுக்கு எட்டும் துாரம் வரை, கடைகளாக படர்ந்துள்ளன.
இதனால், கடற்கரை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகிறது. கடைகளால், பொதுமக்கள் கடற்கரைக்கு எளிதில் சென்றுவரவோ, மணலில் அமர்ந்து நிம்மதியாக பேசவோ முடியவில்லை. இதை தடுக்க, கடல் அலையில் இருந்து, 20 மீட்டர் துாரத்தில் கடைகள் அமைக்காத வகையில், 500 மீட்டர் நீளம், 5 அடி உயரத்தில், சவுக்கு கம்பால் தடுப்பு அமைக்கப்பட்டது.
தடுப்பிற்குள் இருந்த 50 கடைகளை அகற்ற வேண்டும் என, வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அவகாசம் வழங்கினர்.
அவர்கள் கண்டுகொள்ளாமல் கடைகளை நடத்தியதால், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்ற மாநகராட்சி அதிகாரிகள், மீன், பஜ்ஜி, ஐஸ்கிரீம், பாப்கான், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட, 50 கடைகளை அகற்றினர்.
அதேபோல், சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான தி.நகரில் நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களை ஆக்கிரமித்து, ஏராளமான சிறு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து தி.நகரில் 133வது வார்டு அலுவலகத்தில் இருந்து பாண்டி பஜார் தியாகராயர் சாலை செல்லும் சிவபிரகாசம் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று அப்புறப்படுத்தினர்.
பழக்கடை 15, 5 பூக்கடை மற்றும் இளநீர் கடைகள் உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.
மதுரவாயல் 147வது வார்டு டி.கே., நகரில், சாலையோரம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட வாகனங்களையும், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் பள்ளிக்கரணை மற்றும் அத்திப்பட்டு ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.