ADDED : செப் 13, 2024 12:24 AM

பிராட்வே ராயபுரம் மண்டலம், மண்ணடி சுற்றுவட்டார பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி வடக்கு வட்டார சுகாதார அலுவலர் லட்சுமி தேவி உள்ளிட்ட அதிகாரிகள், மண்ணடி பகுதிகளில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வார்டு 57ல் ஆதியப்பன் தெருவில் சுரேஷ், 30, என்பவருக்கு சொந்தமான கடையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், 55வது வார்டில் உள்ள ஹசரத் அலி தெருவில், பிரவீன்குமார், 34, என்பவருக்கு சொந்தமான கிடங்கில், பிளாஸ்டிக் கேரி பேக், கப்புகள், தட்டுகள் உள்ளிட்டவை மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.
அங்கிருந்து 6 லட்ச ரூபாய் மதிப்பிலான, 5,500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கடை மற்றும் கிடங்கிற்கு, தலா 25,000 ரூபாய் என 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்கள், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி அழிக்கப்படும் என, மண்டல சுகாதார துறையினர் தகவல் தெரிவித்தனர்.