/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தலுக்கு கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 7,374! வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அதிகரிப்பு
/
தேர்தலுக்கு கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 7,374! வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அதிகரிப்பு
தேர்தலுக்கு கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 7,374! வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அதிகரிப்பு
தேர்தலுக்கு கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 7,374! வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அதிகரிப்பு
ADDED : ஏப் 03, 2024 12:06 AM

சென்னை, சென்னை மாவட்டத்தில், 107 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதால், கூடுதலாக 7,374 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை 11,843 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், வீடியோ கண்காணிப்பில் கூடுதலாக 16 குழுக்கள் இணைக்கப்பட்டு, 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளில், 19,28,461 ஆண்; 19,95,484 பெண்; 1,199 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என, 39.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அதேபோல, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன.
இதில், வடசென்னையில் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி, அ.தி.மு.க., மனோகர், பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜ் உட்பட 35 பேர்போட்டியிடுகின்றனர்.
தென்சென்னையில், தி.மு.க., வேட்பாளர் சுமதி என்ற தமிழச்சி, அ.திமு.க., வேட்பாளர் ஜெயர்வர்தன், பா.ஜ., வேட்பாளர் தமிழிசை உட்பட 41 பேர் போட்டியிடுகின்றனர்.
மத்திய சென்னையில் தி.மு.க., வேட்பாளர் தயாநிதி, பா.ஜ., வேட்பாளர் வினோஜ், தே.மு.தி.க., வேட்பாளர் பார்த்தசாரதி உட்பட 31 பேர் போட்டியிடுகின்றனர்.
107 வேட்பாளர்கள்
அதன்படி, சென்னை மாவட்டத்தில் 107 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் 15 வேட்பாளர்கள் மற்றும் ஒரு 'நோட்டா' என, 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் இடம்பெறும்.
ஏற்கனவே, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குமான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது, வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மத்திய சென்னையின் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதேபோல, தென் சென்னை, வட சென்னை தொகுதிகளில், தலாமூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ரிப்பன் மாளிகையில் நேற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், இந்த கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.
இது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில் ஏற்கனவே 4,469 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டு கருவிகள், 4,852 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தற்போது வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதலாக 7,374 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
அந்த இயந்திரங்கள் சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் இருந்து, சட்டசபை தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் அனுப்பி வைக்கப்படும்.
பூத் சிலிப் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் ஒரே நாளில் 3.25 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பூத் சிலிப் வழங்கும் பணி நடக்கிறது.
ஓட்டுச்சாவடி மையங்களில், 4,472 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் உட்பட 19,412 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஏற்கனவே, 16 வீடியோ கண்காணிப்பு குழு உள்ள நிலையில், கூடுதலாக 16 சேர்க்கப்பட்டு, எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் போன்ற முக்கிய காரணங்களுக்காக பணம் எடுத்து செல்வோரை வீடியோ பதிவு செய்தாலும், அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

