/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாயில் 8 அடிக்கு மண் கழிவு; ஆர்.கே.நகர், பெரம்பூரில் வெள்ள அபாயம்
/
பகிங்ஹாம் கால்வாயில் 8 அடிக்கு மண் கழிவு; ஆர்.கே.நகர், பெரம்பூரில் வெள்ள அபாயம்
பகிங்ஹாம் கால்வாயில் 8 அடிக்கு மண் கழிவு; ஆர்.கே.நகர், பெரம்பூரில் வெள்ள அபாயம்
பகிங்ஹாம் கால்வாயில் 8 அடிக்கு மண் கழிவு; ஆர்.கே.நகர், பெரம்பூரில் வெள்ள அபாயம்
UPDATED : ஆக 22, 2024 05:57 AM
ADDED : ஆக 22, 2024 12:29 AM

தண்டையார்பேட்டை,
சென்னை, தண்டையார்பேட்டை மண்டலத்தில், ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு, கேப்டன் காட்டன், வியாசர்பாடி, கொடுங்கையூர் கால்வாய் உள்ளிட்ட 13 சிறிய கால்வாய்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3,000 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் உள்ளது.
மேற்கண்ட அனைத்து நீர்வழித்தடம் பகிங்ஹாமில் இணைகிறது. அங்கிருந்து எண்ணுார் முகத்துவாரம் பகுதியில் கடலில் கலக்கிறது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகிங்ஹாம் கால்வாய், 20 ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது. இதனால், 8 அடி உயரத்திற்கு மண் கழிவுகள் தேங்கி உள்ளது. அதன் மீது 1 அடி அளவிற்கு தண்ணீர் செல்கிறது.
அதேபோல, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வியாசர்பாடி, கேப்டன் காட்டன், கொடுங்கையூர் கால்வாய்களும் துார் வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இதனால், 6 அடி உயரத்திற்கு மண் கழிவு தேங்கி காட்சியளிக்கிறது. அதன் மீதும் 1 அடி அளவில் தண்ணீர் செல்கிறது.
இதனால், மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர் செல்ல போதிய வழியில்லை. தண்ணீர் கரைபுரண்டோடி கால்வாயை ஒட்டிய வீடுகளுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதில், பகிங்ஹாம் கால்வாய் ஒட்டி , ஆர்.கே.நகர் தொகுதியில், படேல் நகர், தமிழன் நகர், ராஜிவ் காந்தி நகர், ராஜசேகர் நகர், நேரு நகர், சுண்ணாம்பு கால்வாய், அம்பேத்கர் நகர், பாரதி நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வீடுகளில் புகும் மழைநீரால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், வியாசர்பாடி கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஒட்டி பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.ஆர்.நகர், முல்லை நகர், கண்ணதாசன் நகர்.
மேலும், முத்தமிழ் நகர், துர்கை அவென்யூ, தென்றல் நகர், தாமோதரன் நகர், ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
இது குறித்து, தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் கூறியதாவது:
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகிங்ஹாம் கால்வாயை துார் வாருவதில், அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
பகிங்ஹாம் கால்வாயை துார்வாரக்கோரி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளரிடம் 10 முறைக்கு மேல் மனு கொடுத்துள்ளேன்; நடவடிக்கை இல்லை.
கடந்த ஆண்டு பகிங்ஹாம் கால்வாயை துார்வாருவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு சென்றனர். இதுவரை நடவடிக்கை இல்லை.
ஏற்கனவே, பகிங்ஹாம் கால்வாயையொட்டி உள்ள தமிழன் நகர், நேரு நகர், படேல் நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் கால்வாய்களில் மூடி போடப்பட்டுள்ளது. கால்வாய்களில் மூடி போட்டதாலும் கரைகளை தாண்டி மழைநீர் உட்புகுவதை தடுக்க முடிவதில்லை.
அனைத்து கால்வாய்களின் கரையையும் 5 அடிக்கு உயர்த்த வேண்டும்; 3 அடிக்கு வலை போட வேண்டும். அப்போது தான் மழைநீர் வீடுகளில் உட்புகுவதையும், பொதுமக்கள் குப்பை கொட்டுவதையும் தடுக்க முடியும்.
பருவமழை துவங்க உள்ளதால், உடனடியாக பகிங்ஹாம் கால்வாயை துார் வாரினால் மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.