/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமும் 8 மணிநேரம் மின் தடை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் கொதிப்பு கூடுவாஞ்சேரியில் வெடித்தது போராட்டம்
/
தினமும் 8 மணிநேரம் மின் தடை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் கொதிப்பு கூடுவாஞ்சேரியில் வெடித்தது போராட்டம்
தினமும் 8 மணிநேரம் மின் தடை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் கொதிப்பு கூடுவாஞ்சேரியில் வெடித்தது போராட்டம்
தினமும் 8 மணிநேரம் மின் தடை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் கொதிப்பு கூடுவாஞ்சேரியில் வெடித்தது போராட்டம்
ADDED : ஜூன் 26, 2024 12:19 AM
துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஒக்கியம் துரைப்பாக்கம், எழில் நகர், ஈஸ்வரன் கோவில் நகர், பாலாஜி நகர், என்.ஐ.ஜி.அவென்யூ, குமரன் குடில் நகர், ராஜு நகர் உள்ளிட்ட இடங்களில், 60க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, 3,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஒரு மாதமாக, இப்பகுதியில் தினமும் 3 முதல் 8 மணி நேரம் வரை மின் தடைஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.
இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:
இங்கு பதித்துள்ள மின்வடங்கள் லேசாக பழுதடைந்தால், நிரந்தர சீரமைப்பு பணி செய்வதில்லை. பெயரளவுக்கு ஒட்டுபோட்டு மின்வினியோகம் செய்கின்றனர்.
இதனால், மின்நுகர்வு அதிகரித்து அதிக மின்னழுத்தம் ஏற்படும் போது, ஒரு பகுதி முழுதும் மின் தடை ஏற்படுகிறது. அந்த பழுதை சீரமைத்தால், மற்ற பகுதியில் மின் தடை தொடர்கிறது.
கண்ணகி நகர் மின் வாரியத்தில் பராமரிப்பு ஊழியர்கள் பற்றாக்குறையால், தொடர் மின் தடை ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் தான் அதிகமாக மின் தடை ஏற்படுகிறது. புகார் தெரிவிக்க மின்வாரியத்தை தொடர்பு கொண்டால், போனை எடுப்பதில்லை. நள்ளிரவில் யாரிடம் முறையிடுவது என தெரியவில்லை. மின் தடையால் வேலை, துாக்கம் கெடுகிறது.
கட்டணம் செலுத்த காலதாமதமானால், மின் இணைப்பை துண்டிக்க ஓடி வரும் அதிகாரிகள், பராமரிப்பு பணியை முறையாக செய்வதில்லை. உயரதிகாரிகள் தலையிட்டு, மின் தடை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
கூடுவாஞ்சேரி
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையிலுள்ள புற்று மாரியம்மன் கோவில் அருகில் உள்ள சுற்றுவட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு தொடர் மின் தடை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் 300க்கும் மேற்பட்டோர், நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கூடுவாஞ்சேரியில் இருந்து திருப்போரூர் செல்லும் வாகனங்கள், திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் நோக்கிச் சென்ற வாகனங்கள், நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி, சீரான மின் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.