/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பருவமழை முன்னெச்சரிக்கை அமைச்சர்களிடம் சரமாரி புகார்
/
பருவமழை முன்னெச்சரிக்கை அமைச்சர்களிடம் சரமாரி புகார்
பருவமழை முன்னெச்சரிக்கை அமைச்சர்களிடம் சரமாரி புகார்
பருவமழை முன்னெச்சரிக்கை அமைச்சர்களிடம் சரமாரி புகார்
ADDED : ஆக 17, 2024 12:13 AM

சென்னை, சென்னை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில், ரிப்பன் மாளிகையில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் பங்கேற்று, தங்கள் பகுதியில் மேற்கொள்ளும் பணியில் உள்ள தொய்வு குறித்து புகார் அளித்தனர்.
மேலும், சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரயில் நிறுவனம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தெற்கு ரயில்வே துறை, மின்சாரத்துறை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ஆகிய துறைகள் சார்பாக, சென்னையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால்களில், 74.1 சதவீதம் துார்வாரப்பட்டுள்ளது. அதேபோல், 68,746 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் துார்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, 70,304 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
மெட்ரோ ரயில் பணியால், 20 இடங்களில் மழைநீர் செல்வதில் சிக்கல் உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவை சரியாக இருக்காது என, உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதனால், இந்த கூட்டத்தில் கூறப்பட்ட குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அடுத்த 15 நாட்களில் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும். அதேபோல், சென்னையில் உள்ள நீர்வளத்துறையின் நீர்நிலைகளை மாநகராட்சி பராமரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

