/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதையில் கழிவுநீர் கலந்த குடிநீரால் விபரீதம் சிறுவன் உயிரிழப்பு! வடமாநிலத்தவர் என்பதால் லஞ்சம் கேட்டு அடாவடி
/
சைதையில் கழிவுநீர் கலந்த குடிநீரால் விபரீதம் சிறுவன் உயிரிழப்பு! வடமாநிலத்தவர் என்பதால் லஞ்சம் கேட்டு அடாவடி
சைதையில் கழிவுநீர் கலந்த குடிநீரால் விபரீதம் சிறுவன் உயிரிழப்பு! வடமாநிலத்தவர் என்பதால் லஞ்சம் கேட்டு அடாவடி
சைதையில் கழிவுநீர் கலந்த குடிநீரால் விபரீதம் சிறுவன் உயிரிழப்பு! வடமாநிலத்தவர் என்பதால் லஞ்சம் கேட்டு அடாவடி
ADDED : ஜூன் 30, 2024 12:09 AM

சென்னை : சைதாப்பேட்டையில் வாந்தி, பேதி ஏற்பட்டு, 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அவனது தங்கையான, 7 வயது சிறுமியும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், குடிநீர் மாதிரிகளை, உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது, வடமாநிலத்தவர் என்பதால் அங்குள்ள ஊழியர்கள் லஞ்சம் கேட்டு அடாவடி செய்துள்ளனர்.
பீஹார் மாநிலம், நவாதா மாவட்டம், தேராசாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 39. இவர், மனைவி சுமன்குமாரி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுடன் வேலை தேடி, 10 நாட்களுக்கு முன், சென்னை வந்துள்ளார்.
சைதாப்பேட்டை, அபித் காலனி பிரதான சாலையில், வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ராஜேஷ்குமார், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர், கிண்டியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மற்ற இரண்டு மகன்கள், மகள் ஆகியோர் வீட்டில் உள்ளனர்.
அடாவடி சம்பவம்
இதற்கிடையே, 11 வயது சிறுவன் யுவராஜிக்கு, 26ம் தேதி, இரண்டு முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிறுவனின் பெற்றோர், அருகில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர்.
மறுநாள் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், பெற்றோர் வேலைக்கு சென்றனர். தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட, சிறுவனுக்கு பணமும் கொடுத்துள்ளனர்.
அன்று மதியம் 2:00 மணிக்கு வேலை முடித்து பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, சிறுவன் வாந்தி எடுத்துள்ளான்.
பின், அருகில் உள்ள கிளினிக்கில், சிறுவனுக்கு ஊசி மற்றும் மாத்திரை கொடுத்து, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
தொடர்ந்து, சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுவனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர். அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வீட்டில் இருந்த 7 வயது மகள் மீரா குமாரியும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அச்சிறுமி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வடமாநிலத்தவர் என்பதால், அங்குள்ள பணியாளர்கள் லஞ்சம் கேட்டு அடாவடி செய்த சம்பவமும் அரங்கேறியது.
இது குறித்து, குழந்தைகளின் தந்தை ராஜேஷ் குமார் கூறியதாவது:
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, மகளை அழைத்து சென்றபோது, அங்குள்ள பணியாளர்கள் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். 'அரசு மருத்துவமனையில் இலவசம் தானே' என கேட்டேன். 'வெளி மாநிலத்தவருக்கு இலவச சிகிச்சை இல்லை' என தெரிவித்தனர்.
சென்னை வந்து 10 நாட்கள் தான் வேலை செய்தேன். போதியளவு பணம் இல்லாததால், 1,000 ரூபாய் கொடுத்தேன். அதன்பின், தான் சிகிச்சை அளிக்க துவங்கினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரணம் என்ன?
இந்நிலையில், சிறுவன் உயிரிழப்பு மற்றும் சிறுமி உடல்நிலை பாதிப்புக்கு, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால், அப்பகுதியில் வழங்கப்பட்ட குடிநீர் மாதிரிகளை, உணவு பாதுகாப்பு துறையினர் சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அதேபோல், சென்னை மாநகராட்சி சார்பில், மருத்துவ முகாமை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், அபித் காலனியில் நடந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்தார். மேலும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு, 'டாக்சி சைக்ளின்' மாத்திரைகள் வழங்கப்பட்டன.
சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அபித் காலனியில் இருந்து வெளியேறும் மழைநீர், அதன் இறுதி முனை பகுதி வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும். ஆனால், முனைப்பகுதியில் தடுப்புசுவர் கட்டப்பட்டதால், நீர் செல்ல முடியாமல், குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டு, சுற்றுச்சுவரில் ஓட்டை போடப்பட்டு, கழிவுநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. குடிநீரில் கழிவுநீர் கசிவுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
''சிறுவன், அருகில் உள்ள பெட்டிக்கடையில் காலாவதியான பொருட்களை சாப்பிட்டாரா என, ஆய்வு செய்துள்ளோம்.
''மேலும், குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் பாக்டீரியாவை அழிக்க கூடிய உரிய குளோரின் அளவு உள்ளதா என்பதை கண்டறிய, கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம்,'' என்று, சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர், சதீஷ் குமார் கூறினார்.
இன்று முதல் மருத்துவ முகாம்
பீஹாரைச் சேர்ந்த சிறுவன், 10 நாட்களுக்கு முன், சைதாப்பேட்டையில் குடியேறியிருந்தான். உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளான். அந்த சிறுவனின் வீட்டை சோதனை செய்தபோது, பழைய சாதம், மாசடைந்த குடிநீர் இருந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வழங்கிய நீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினோம். அதில், எந்தவொரு கலப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. உடற்கூராய்வுக்கு பின்னரே, சிறுவனின் இறப்பு குறித்து தெரியவரும். கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில், மாநகராட்சி சார்பில் இன்று முதல் மருத்துவ முகாம் நடத்தப்படும்.
- மா.சுப்பிரமணியன்,
அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை
மஞ்சள் நிறத்தில் தொட்டி
அபித் காலனி பகுதியில், ஒரு மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. சமையல் செய்யவும், பாத்திரம் கழுவவும் கூட முடியவில்லை. தண்ணீர் தொட்டி முழுதும் மஞ்சள் நிறத்தில் தான் உள்ளது. குடிநீர் வாரியத்துக்கு புகார் அளித்தும் பயனில்லை.
- கோபாலன்,
குடியிருப்புவாசி, அபித் காலனி

