/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேற்கு ஜாபர்கான்பேட்டையில் ரேஷன் அரிசி பதுக்கிய வீடு முற்றுகை
/
மேற்கு ஜாபர்கான்பேட்டையில் ரேஷன் அரிசி பதுக்கிய வீடு முற்றுகை
மேற்கு ஜாபர்கான்பேட்டையில் ரேஷன் அரிசி பதுக்கிய வீடு முற்றுகை
மேற்கு ஜாபர்கான்பேட்டையில் ரேஷன் அரிசி பதுக்கிய வீடு முற்றுகை
ADDED : ஆக 30, 2024 12:34 AM

எம்.ஜி.ஆர்., நகர், கோடம்பாக்கம் மண்டலம், 138வது வார்டு, மேற்கு ஜாபர்கான்பேட்டை ஜான் கென்னடி தெருவில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று காலை, மா.கம்யூ., பகுதி செயலர் ரவி தலைமையில், பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர்.
தகவலின்படி வந்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், உணவு பொருள் வழங்கல் துறை சைதாப்பேட்டை உதவி கமிஷனர் ராகிணி ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு, 11 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணையில், கன்னியப்பன் என்பவருக்குச் சொந்தமான வீட்டை, கோலமாவு விற்பனை செய்வதாகக் கூறி, மதன், 36, என்பவர் வாடகைக்கு எடுத்தது தெரிந்தது.
இதில் தொடர்புடையோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பொருள் வழங்கல் துறை உதவி கமிஷனர் தெரிவித்தார்.
இந்த இடத்தில், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜும் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மா.கம்யூ., பகுதி செயலர் ரவி கூறியதாவது:
மேற்கு ஜாபர்கான்பேட்டை, ஜான் கென்னடி தெருவில், நேற்று முன்தினம் இரவு லாரியில் 20 மூட்டை அரிசி ஏற்றிச் செல்லப்பட்டது.
நேற்று காலை அந்த இடத்தை முற்றுகையிட்டோம். அங்கு வந்த அதிகாரிகளும், ரேஷன் அரிசி என உறுதி செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அரிசியை அங்கேயே வைத்து விட்டுச் சென்றனர்.
இதேபோல், எம்.ஜி.ஆர்., நகர் சங்கரலிங்கனார் தெருவிலுள்ள கட்டடத்தில், இரண்டு மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. மேலும், எம்.ஜி.ஆர்., நகர் கண்ணகி தெருவிலுள்ள கடையில், 10 -- 15 மூட்டை அரிசி உள்ளது. இந்த இடங்களுக்கு உணவு வழங்கல் துறை அதிகாரிகள் வரவில்லை.
ரேஷன் அரிசி வாங்காதவர்களுக்கும், அரிசி வாங்கியதாக குறுந்தகவல் வருகிறது.
இந்த அரிசியை, கடை ஊழியர்கள் போலி 'பில்' போட்டு, மாவு அரைக்கும் நபர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

