/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் தொகுதியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு ரூ.91.3 கோடியில் தயாராகும் கான்கிரீட் கால்வாய்
/
முதல்வர் தொகுதியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு ரூ.91.3 கோடியில் தயாராகும் கான்கிரீட் கால்வாய்
முதல்வர் தொகுதியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு ரூ.91.3 கோடியில் தயாராகும் கான்கிரீட் கால்வாய்
முதல்வர் தொகுதியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு ரூ.91.3 கோடியில் தயாராகும் கான்கிரீட் கால்வாய்
ADDED : செப் 18, 2024 12:54 AM

சென்னை,முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தணிகாசலம் நகர் கால்வாய் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வடகிழக்கு பருவ மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதிப்பை சந்திக்கின்றன. சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் வெள்ள நீரை அகற்றுவதற்கு, மோட்டார்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின், கொளத்துார் சட்டசபை தொகுதியில், பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பது வழக்கமாக உள்ளது.
வெள்ள நீரை வெளியேற்ற, நுாறடிச்சாலையில் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இது ஓரளவிற்கு கைகொடுத்து வருகிறது.
இதன் அடுத்த முயற்சியாக, கொளத்துார் மற்றும் மாதவரம் பகுதிகள் வழியாக பயணிக்கும், தணிகாசலம் நகர் கால்வாயை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கால்வாய் 3.05 கி.மீ., நீளம் உடையது. இது, 1.80 கி.மீ., வரை 4 மீட்டர் அகலத்திலும், அங்கிருந்து இறுதி வரை 6 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது.
வெள்ளகாலங்களில் கொளத்துார் மற்றும் மாதவரம் ரெட்டேரி உபரிநீர் வெளியேறி, தணிகாசலம் நகர் கால்வாய்க்கு வருகிறது. நுாறடிச்சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கால்வாய் மற்றும் சென்னை மாநகராட்சியின் 16 பெரிய மற்றும் சிறிய கால்வாய்களும், தணிகாசலம் நகர் கால்வாயில் கலக்கின்றன.
கடந்தாண்டு மிக்ஜாம் புயலின்போது, கொளத்துார் தொகுதியில் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்கு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், வெள்ளபாதிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உத்தரவிட்டார்.
அதன்படி, தணிகாசலம் நகர் கால்வாயை கட்டமைக்க நீர்வளத்துறை வாயிலாக, 100 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
நிதித்துறை 91.3கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில், தணிகாசலம் நகர் கால்வாயை திறந்தவெளி மற்றும் மூடுகால்வாயாக மாற்றும் கட்டுமான பணிகளை 2023, ஆக., 30 ல், முதல்வர் துவக்கிவைத்தார். கால்வாய் பணியை 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கட்டுமான பணிகளை அவ்வப்போது முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். பணிகளில் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து, வேறு இடத்தில் இருந்த பொறியாளரை நியமித்து பணிகள் வேகப்படுத்தப்பட்டன.
தற்போது கால்வாய் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பணிகளை வரும் 30 ம்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கால்வாய்க்கு தடுப்புவேலி அமைக்கும் பணிகள் எஞ்சியுள்ளது.
இப்பணிகள் நிறைவு பெறும் கட்டத்தை எட்டியுள்ளதால், யுனைடெட் காலனி, செல்வம் நகர், சிவானந்தா நகர், ராமலிங்கா நகர், நாகத்தம்மான் கோவில், குமரன் நகர், சந்திரபிரபு காலனி பகுதிகளில் வெள்ளபாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

