/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிவுடையம்மன் கோவிலில் நாளை ஆடிப்பூர வளைகாப்பு
/
வடிவுடையம்மன் கோவிலில் நாளை ஆடிப்பூர வளைகாப்பு
ADDED : ஆக 06, 2024 01:04 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி நாளை மாலை, அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில், மூலவர் தாயாருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும். அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில், உற்சவ தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில், மண்டபத்தில் எழுந்தருள்வார். அம்மனுக்கு, முளை கட்டிய பயிறு வகைகள், தின்பண்டங்கள் அடங்கிய மூட்டையை வயிற்றில் கட்டி, வளையல் அணிவிக்கப்பட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கும்.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், கோவில் உதவி கமிஷனர் நித்யா தலைமையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோல, மணலி திருவுடைநாதர் சமேத திருவுடைநாயகி கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி மூலவர் தாயாருக்கு அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் நடைபெறும். மாலையில், உற்சவ தாயார் பிரமாண்ட மலர் அலங்காரத்தில் எழுந்தருள்வார். பின், ஊஞ்சல் சேவை நடக்கும். அதை தொடர்ந்து, இக்கோவிலில் விளக்கு பூஜையும் நடைபெறும்.
நாச்சியார் கோலம்
திருவொற்றியூர் அடுத்த, காலடிப்பேட்டை - கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூரத்தில், விசேஷ அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நாளை காலை, மூலவர் தாயாருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். மாலையில், உற்சவ தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வருவார். பின், நாச்சியார் கோலத்தில், ஊஞ்சல் சேவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சோமசுந்தரம் தலைமையிலான கோவில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.