ADDED : ஜூன் 28, 2024 12:38 AM
சென்னை, சென்னையில், வீதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளுக்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில், 2,500க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகள், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு உள்ளன.
இவற்றை அகற்றும்படி, மாநகராட்சி கமிஷனர் பலமுறை உத்தரவிட்டும், மண்டல அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இந்த விளம்பர பதாகைகள், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிப்பதுடன், விபத்துகள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்துள்ளன. மேலும், மழைக்காலத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளை, சென்னை மாநகரில் அமைக்க தடை விதிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், 220 விளம்பர பதாகைகள், பலகைகளுக்கு அனுமதி அளிக்க, மாநகராட்சி பட்டியல் தயாரித்து வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அனுமதியின்றி, சென்னையில் பல இடங்களில், ஏற்கனவே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றின் உரிமையாளர்கள், விளம்பர பதாகைகளை அகற்றாமல் இருக்க, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் விளம்பர பதாகைகளுக்கு, உரிய விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க, நீதிமன்றம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அதுவரை, வீதிமீறி வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்றக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, ஜூலை முதல் வாரத்திற்குள் 220 விளம்பர பதாகைகள், பலகைகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

