/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு முகத்துவார குப்பை பசுமை தீர்ப்பாயம் கவலை
/
அடையாறு முகத்துவார குப்பை பசுமை தீர்ப்பாயம் கவலை
ADDED : ஆக 15, 2024 12:18 AM
சென்னை, மழை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், அடையாறு முகத்துவாரத்தில் தண்ணீர் தடையின்றி செல்ல வேண்டும் என தாங்கள் கவலைப்படுவதாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரைகள் மற்றும் அடையாறு முகத்துவாரம் அருகே உள்ள மணல் மேடுகளில் பிளாஸ்டிக், கட்டடக் கழிவு உள்ளிட்ட குப்பை குவிந்துள்ளது.
இதனால், தண்ணீர் செல்ல முடியாமல், மழைக்காலங்களில் சென்னை மாநகரில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே கடற்கரைகள், அடையாறு முகத்துவாரங்களில் உள்ள குப்பையை அகற்றி துார்வார வேண்டும் என, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வரும் தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சென்னை அமைந்தகரையில், கூவம் கரையோரத்தில் கட்டுமான கழிவுகளை கொட்டிய அத்துமீறல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
ஆனால் நீர்வளத்துறையும், சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளையும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
மழை ஏற்கனவே துவங்கி விட்டதால், சென்னை ஆறுகள், முகத்துவாரப் பகுதிகளில் தண்ணீர் தடையின்றி செல்வதைப் பற்றி மட்டுமே, தீர்ப்பாயம் கவலை கொள்கிறது.
எனவே, தீர்ப்பாய உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.