/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் புது மாற்றங்களுடன் மதிப்பீடு அறிக்கை தயாரிப்பு
/
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் புது மாற்றங்களுடன் மதிப்பீடு அறிக்கை தயாரிப்பு
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் புது மாற்றங்களுடன் மதிப்பீடு அறிக்கை தயாரிப்பு
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் புது மாற்றங்களுடன் மதிப்பீடு அறிக்கை தயாரிப்பு
ADDED : ஆக 15, 2024 12:23 AM

சென்னை,
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டத்தை சில மாற்றங்களுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என, 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து புதிய பேருந்து முனைய நிலையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ., துாரம், மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு 4,080 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
சென்னையின் பிரதானமான ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, இந்த வழித்தடம் அமைகிறது. பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்துார், வண்டலுார், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் ஒப்படைத்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்த தடத்தில், பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்களும் இருப்பதால், இந்த திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதாக, கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், இந்த திட்டப்பணியில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையில், கிளாம்பாக்கத்தில் கடந்த ஆண்டு டிச., 30ல், புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு சென்று திரும்ப போதிய இணைப்பு வாகன வசதி இல்லாததால், பயணியர் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், விமானநிலையம் வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை, கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறியதாவது:
விமான நிலையம் -- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உறுதியாகி உள்ளது. ஆனால், திட்ட வடிவமைப்பில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. முதலில், மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
பின், நெடுஞ்சாலையுடன் ஒருங்கிணைந்து மேம்பால பாதை அமைக்க, மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 24 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, 16 மீட்டராக உயரத்தை குறைத்து உள்ளோம்.
முதலில், மூன்று நிலைகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிட்டிருந்தோம். தற்போது, இரண்டு நிலைகளாக மாற்றி, நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மாற்றங்களை செய்து, ஒரு வாரத்தில் திட்ட மதிப்பீடுடன் அறிக்கை தயாரிக்கப்படும். இதையடுத்து, அரசின் ஒப்புதலை பெற்று, திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.