/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் பிரசாரம் முடிந்ததால் வெளியூர் நபர்கள்… வெளியேற்றம்! தங்கும் விடுதி, மண்டபங்களில் போலீஸ் சோதனை
/
தேர்தல் பிரசாரம் முடிந்ததால் வெளியூர் நபர்கள்… வெளியேற்றம்! தங்கும் விடுதி, மண்டபங்களில் போலீஸ் சோதனை
தேர்தல் பிரசாரம் முடிந்ததால் வெளியூர் நபர்கள்… வெளியேற்றம்! தங்கும் விடுதி, மண்டபங்களில் போலீஸ் சோதனை
தேர்தல் பிரசாரம் முடிந்ததால் வெளியூர் நபர்கள்… வெளியேற்றம்! தங்கும் விடுதி, மண்டபங்களில் போலீஸ் சோதனை
ADDED : ஏப் 17, 2024 11:14 PM

சென்னை :லோக்சபா தேர்தல் பிரசாரம், கட்சி பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கட்சியினர், தங்கும் விடுதிகள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரா என, போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர்களை சென்னையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சியினர் பிரசாரம் துவங்கியது. சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளில், பிரதான கட்சியினர் உட்பட 107 பேர் போட்டியிடுகின்றனர்.
வடசென்னையில் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி, அ.தி.மு.க., வேட்பாளர் மனோகர், பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜ், நா.த.க., அமுதினி உட்பட 35 பேர் போட்டியிடுகின்றனர்.
தென்சென்னையில், தி.மு.க., வேட்பாளர் சுமதி என்ற தமிழச்சி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயர்வர்தன், பா.ஜ., வேட்பாளர் தமிழிசை, நா.த.க., வேட்பாளர் தமிழ்செல்வி உட்பட 41 பேர் போட்டியிடுகின்றனர்.
மத்திய சென்னையில் தி.மு.க., வேட்பாளர் தயாநிதி, பா.ஜ., வேட்பாளர் வினோஜ், தே.மு.தி.க., வேட்பாளர் பார்த்தசாரதி, நா.த.க., வேட்பாளர் கார்த்திகேயன் உட்பட 31 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதில் இருந்து, தேர்தல் பிரசாரங்களில், அந்தந்த வேட்பாளர்கள், தீவிரம் காட்டியதால், சென்னையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது.
தங்களது கட்சி மற்றும் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், வேட்பாளர்கள் பலர் உள்ளூர் நபர்களை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆட்களை, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம், நேற்று மாலை 6:00 மணியுடன் முடிவடைந்தது. சென்னையின் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அதேபோல், அந்தந்த மாவட்ட வாக்காளர்களை தவிர, குறிப்பாக, தேர்தல் பணிக்கு வந்திருக்கும் வெளியூர் நபர்கள், 6:00 மணிக்கு மேல் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
எனவே, சென்னை மாவட்டத்திற்கு, தேர்தல் பணிக்காக அழைத்து வரப்பட்ட வெளியூர் ஆட்கள், தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனரா என, தங்கும் விடுதி மற்றும் மண்டபங்களில் போலீசார், நேற்று மாலை தீவிர சோதனை நடத்தினர்.
குறிப்பாக, பெரியமேடு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, மேன்சன், தங்கும் விடுதிகளில், தேர்தல் பணிக்காக வந்தவர்கள் தொடர்ந்து தங்கி இருக்கின்றனரா என, சோதனை செய்தனர்.
அங்கு தங்கியிருந்தோரின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். அவ்வாறு அடையாள அட்டை இல்லாதவர்களிடம் உரிய விளக்கம் பெறப்பட்டு, தேர்தல் பணிக்காக வந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர், வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேபோல, சிறிய மண்டபங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து, சென்னை காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் பணிக்காக வந்தவர்கள், பிரசாரம் முடிந்தவுடன், சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாமல் இருப்போரை தான் வெளியேற்றி வருகிறோம்.
தேர்தல் பணிக்கு வந்த வெளியூரைச் சேர்ந்தோர் தங்குவதால், தேவையில்லாத சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கள்ள ஓட்டுகள் போடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
எனவே, அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரை வெளியேற்றி வருகிறோம். தமிழகம் முழுதும் தேர்தல் நடப்பதால், அதிகளவிலான வெளியூர் நபர்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு குறைவு. ஆனாலும், தொடர்ந்து அனைத்து தங்கும் விடுதிகளையும் திருமண மண்டபங்களையும் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

