ADDED : ஜூலை 05, 2024 12:38 AM
திருவல்லிக்கேணி, பட்டாபிராம், அண்ணாநகர், ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன், 24; ஆவடி மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று அண்ணாசாலை வந்து, மாநகராட்சி அதிகாரியின் மடிக்கணியை சரிசெய்து கொண்டு, சென்ட்ரல் கிளம்பினார். சிம்சன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, '1எப்' மாநகர பேருந்தில் ஏறியதும், டிக்கெட் எடுக்கும்படி நடத்துனர் கூறியுள்ளார். தன்னிடம் 1,000 ரூபாய் 'பாஸ்' இருப்பதாக லோகநாதன் கூறியுள்ளார்.
அந்த பாசை எடுக்க, சற்று காலதாமதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர், ஆபாச வார்த்தையால் லோகநாதனை திட்டியுள்ளார்.
மேலும், பேருந்தை பல்லவன் பேருந்து பணிமனைக்குள் நிறுத்தி, அங்கிருந்த ஊழியர்களுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் காயமடைந்த லோகநாதன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, பணிமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.