/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 வழக்காவது பதிவு செய்யணும் ரோந்து போலீசுக்கு 'சும்மா' இலக்கு
/
3 வழக்காவது பதிவு செய்யணும் ரோந்து போலீசுக்கு 'சும்மா' இலக்கு
3 வழக்காவது பதிவு செய்யணும் ரோந்து போலீசுக்கு 'சும்மா' இலக்கு
3 வழக்காவது பதிவு செய்யணும் ரோந்து போலீசுக்கு 'சும்மா' இலக்கு
ADDED : மே 09, 2024 12:05 AM

சென்னை, சென்னை காவல் நிலையங்களின் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், பணி நேரம் முடிவதற்குள், 'பெட்டி கேஸ்' உட்பட மூன்று வழக்குகள் பதிவு செய்திருக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனரகத்தின் கீழ், 104 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய எல்லைகளில், 'ஷிப்ட்' முறையில் போலீஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காரர்கள், தங்கள் பணி நேரம் முடிவதற்குள் குறிப்பிட்ட சில 'சில்லரை குற்றங்கள்' எனும், 'பெட்டி கேஸ்' பதிவு செய்திருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
என்னென்ன வழக்கு?
ஒரு பெட்டி கேஸ், குற்றவியல் நடைமுறை சட்டம் - 41 பிரிவின் கீழ் ஒரு வழக்கு மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டியது உள்ளிட்டவை. குறைந்தது இந்த வழக்கு கூட பதியவில்லை என்றால், போலீசார் பணி நேரம் முடிந்தாலும், பணியில் இருந்து விடுவிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதில், தமிழ்நாடு சிட்டி போலீஸ் சட்டம் பிரிவு - 75 என்பதையே பெட்டி கேஸ் என்கின்றனர். காவல் நிலையத்தில் அடிக்கடி பதியப்படும் வழக்குகளில் இதுவும் ஒன்று. சாதாரண வழக்கு என குறிப்பிடப்படுகிறது.
பொது அமைதியை மீறும் நபர்கள் மீது இந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
குறிப்பாக, பொது அமைதியை பேணுவதற்கு பொறுப்பான ஒரு பொது ஊழியர் கடமையை செய்யும் போது, ஒருவரை கேள்வி கேட்டால், அதற்கு நாகரிகமாக பதிலளிக்க வேண்டும். எனவே, வாகன சோதனையில் போலீசாரிடம் கோபமாக பேசினாலும் இந்த வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
சிறை
ஒரு நபர் மீது மூன்று '75' வழக்குகள் பதிவானால், குற்றவியல் நடைமுறை சட்டம் - 110 விதியின் கீழ் வழக்கு பதிந்து, 'எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்ட்ரேட்' முன் ஆஜர்படுத்தி, நன்னடத்தை கடிதம் எழுதி பெறப்படும். அந்த நன்னடத்தை கடிதத்தையும் மீறும் நபர்கள் சிறையில் அடைக்கப்படுவர்.
அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படலாம்.
சென்னையை பொறுத்தவரை, முழுநேரக் கடைகள், நள்ளிரவு பிரியாணி கடைகள், தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் ஏராளமாக உள்ளன.
குறிப்பாக அண்ணா நகர் அடுத்த திருமங்கலம் மெட்ரோ, புளியந்தோப்பு, கிண்டி கத்திப்பாரா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு, வெவ்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவு இளைஞர்கள் படையெடுப்பர்.
சிலர் 'நைட் ரைடிங்' செல்வர். இப்படி செல்லும் போது, போதிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் சென்று போலீஸ் சோதனையில் சிக்கும்போது, மேலே குறிப்பிட்ட பெட்டி கேஸ்களுக்கு ஆளாக நேரிடும்.
குறிப்பாக, கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என, பலர் மீது பிரிவு - 75ல் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதனால், அவர்கள் பிற இடங்களில் படிப்பதற்கும், வேலைகளுக்கு செல்லவும் நடத்தை சான்றிதழ் பெறும் போது, அதில் இந்த குற்றம் பிரதிபலிப்பதால், பாதிக்கப்படும் நிலை உள்ளது.
ரூ.2,800 அபராதம்
அதுமட்டுமல்லாமல், இந்த பிரிவு 75ல் வழக்குப் பதிவு செய்தால், அதற்காக 2,800 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது. இதில், நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய தொகை தவிர்த்து, மீதித் தொகையை போலீசார் பங்கிட்டுக் கொள்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும், இரவு 11:00 மணிக்கு மேல் சுற்றித் திரியும் நபர்களை சந்தேகத்தின்படி காவல் நிலையம் அழைத்துச் சென்று, குற்றவியல் நடைமுறை சட்டம் - 41 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
அத்துடன், அவர்கள் கைரேகை எடுத்து, அதை மாநில குற்றப்பதிவு பணியகம் அனுப்பி வைக்கின்றனர். மறுநாள் காலை 10:00 மணிக்கு மேல், மாநில குற்றப்பதிவு பணியகத்தில் இருந்து, அவர்கள் மீது எந்த காவல் நிலையத்திலும் ஏற்கனவே வழக்கு இல்லை என உறுதி செய்த பின், அனுப்பப்படுகின்றனர்.
இதனால், இரவு காவல் நிலையம் அழைத்து வரும் நபரை, மறுநாள் காலை வரை காவல் நிலையத்தில் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, போலீஸ்காரர்கள் பணி செய்ய வேண்டும் என்பதற்காக வழக்கு போட இலக்கு நிர்ணயம் செய்தாலும், யார் மீது வழக்கு பதிய வேண்டும்? யார் மீது வழக்கு பதியக்கூடாது என, உயரதிகாரிகள் உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அயராது உழைக்கும் போலீசார்
போலீசாருக்கு வழக்கு பதிய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், ரோந்து பணியில் உள்ள போலீசார் வேலை செய்கின்றனரா என்பதை கண்காணிக்க, சில வழிமுறைகளை கடைப்பிடிக்கிறோம். வழக்கு போடவில்லை என்றால், போலீசாரின் பணி நேரம் நீட்டிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. பொதுமக்களின் நலனுக்காக, போலீசார் இரவு, பகல் பாராது உழைப்பவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
சந்தீப் ராய் ரத்தோட்,
போலீஸ் கமிஷனர்