/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நாசமாகும் அயனம்பாக்கம் ஏரி
/
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நாசமாகும் அயனம்பாக்கம் ஏரி
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நாசமாகும் அயனம்பாக்கம் ஏரி
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நாசமாகும் அயனம்பாக்கம் ஏரி
ADDED : ஆக 05, 2024 01:13 AM

திருவேற்காடு நகராட்சி, கோலடி பகுதியில் 210 ஏக்கரில் அயனம்பாக்கம் ஏரி உள்ளது. கடந்த 2015ல், ஏரியில் இருந்த 2,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, 7 அடிக்கு ஆழப்படுத்தப்பட்டது.
அதன் பின், கடந்த 2016ல் அரசு நிதி ஒதுக்கி, 17 கோடி ரூபாய் செலவில், 2 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கால்வாய், திருவேற்காடு சுந்தரசோழபுரம் அருகே கூவம் ஆற்றின் ஆவடி பருத்திப்பட்டு அணைக்கட்டில் இருந்து அயனம்பாக்கம் ஏரிக்குள் இணைகிறது.
மழை காலத்தில் கூவம் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், வினாடிக்கு 200 கன அடி வீதம், கூடுதலாக அயனம்பாக்கம் ஏரிக்கு கிடைத்தது.
கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, அயனம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரிப்பு செய்ய, தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு திட்டமிட்டது. அதற்காக குடிநீரை ஆய்வு செய்து, பின் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
கடந்தாண்டு பெய்த கனமழையால் திருவேற்காடு, ராஜரத்தினம் நகர், 4வது தெருவில் அமைக்கப்பட்ட கலங்கல் சேதமடைந்தது. மேலும், பல்லவன் நகர் மற்றும் அம்மன் நகர் அருகே ஏரியின் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது.
50,000 வீடுகள்
இந்நிலையில், கடந்த ஓராண்டாக தேவி நகர், எம்.ஆர்.நகர், தம்புசாமி நகர், டி.டி.எஸ்., நகர். கஸ்துரிபாய் அவென்யூ, செல்வகணபதி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிளில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து கழிவுநீர், பல்லவன் நகர் அருகே ஏரியில் பாய்கிறது.
இதனால், ஏரியின் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதோடு, ஏரியில் உள்ள மீன்கள் அடிக்கடி செத்து மிதக்கின்றன.
அதேபோல், ஆவடியில் இருந்து சுந்தரசோழபுரம் வழியாக வரும் கால்வாயிலும், கழிவுநீர் கலக்கிறது. இதன் காரணமாக ஏரி, நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், அயனம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்து, ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
மழைக்கு முன் அயனம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் ஆய்வு செய்து, துாய்மைப்படுத்தி, தேவையான இடத்தில் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். ஆவடியில் உள்ள பசுமை பூங்காவை போல், படகு குழாம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், ஏரியும் தொடர் கண்காணிப்பில் இருக்கும்.
- முருகன்,
சமூக ஆர்வலர், திருவேற்காடு
- -நமது நிருபர் -