/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட், தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
ஏர்போர்ட், தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 01, 2024 12:40 AM
சென்னை, மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், காரணை பிரதான சாலையில், அமிதிஸ்ட் என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம், மாலை 4.00 மணிக்கு மின்னஞ்சல் வந்தது.
உடனே, பள்ளி நிர்வாகம் மாணவர்கள் அனைவரையும் வளாகத்திலிருந்து வெளியேற்றிய நிலையில், மின்னஞ்சல் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு 9.00 மணி வரை நீடித்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதே போன்று பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குளோபல் தனியார் மருத்துவமனைக்கு, கடந்த 10 தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டு, சோதனைக்கு பின் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, இரு சம்பவங்களின்படி, போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
ஏர்போர்டிற்கு மிரட்டல்
சென்னையிலிருந்து கோவா, பெங்களூரு, மும்பை செல்லும் விமானங்களில், திரவ வடிவிலான வெடிகுண்டு வைத்திருப்பதாக, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, நேற்று ஒரு இ - மெயில் வந்துள்ளது.
உடனே, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய் உதவியுடன், விமான நிலையம், விமானங்களிலும் சோதனை செய்தனர்.
இதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் புரளி என தெரிந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.