/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய அரசு அலுவலகத்திற்கு குண்டு மிரட்டல்
/
மத்திய அரசு அலுவலகத்திற்கு குண்டு மிரட்டல்
ADDED : பிப் 15, 2025 12:28 AM

ஆவடி: ஆவடி, எச்.வி.எப்., சாலையில், மத்திய அரசின் கனரக வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் ஏ.வி.என்.எல்., எனும் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு, 134 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், மதியம் 2:55 மணிக்கு வெடிக்கும் எனவும், நேற்று காலை 7:44 மணிக்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது.
இணைய சேவை பிரச்னையால், காலையில் இந்த மின்னஞ்சலை, ஊழியர்களால் பார்க்க முடியவில்லை. மதியம் 2:30 மணிக்கு, வெடிகுண்டு மிரட்டலை பார்த்த பின், ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர்.
ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபணர் சண்முகம் தலைமையிலான குழுவினர் வந்து, மதியம் 2:55 மணியில் இருந்து 5:20 மணி வரை, ஜான்சி என்ற மோப்ப நாயுடன், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளி என்பது உறுதிசெய்யபட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.