/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூண்டி ஏரி ஷட்டர் பராமரிப்பு அவசரகதி! நீர்வரத்து துவங்கும் நிலையில் நீர்வளத்துறை பரபரப்பு
/
பூண்டி ஏரி ஷட்டர் பராமரிப்பு அவசரகதி! நீர்வரத்து துவங்கும் நிலையில் நீர்வளத்துறை பரபரப்பு
பூண்டி ஏரி ஷட்டர் பராமரிப்பு அவசரகதி! நீர்வரத்து துவங்கும் நிலையில் நீர்வளத்துறை பரபரப்பு
பூண்டி ஏரி ஷட்டர் பராமரிப்பு அவசரகதி! நீர்வரத்து துவங்கும் நிலையில் நீர்வளத்துறை பரபரப்பு
ADDED : ஆக 12, 2024 10:40 PM

சென்னை : ஆந்திர மாநில தென்மேற்கு பருவமழை நீர்வரத்து, அவ்வப்போது பெய்து வரும் மழையால், பூண்டி ஏரிக்கு தண்ணீர் சேகரமாகும் காலத்தில், ஷட்டர்கள் பராமரிப்பு மற்றும் மணல் போக்கி கள் புதுப்பிப்பு பணிகளை, நீர்வளத்துறை அவசர அவசரமாக செய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரி 3.23 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இந்த ஏரியின் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
பூண்டி ஏரிக்கு, வடகிழக்கு பருவமழை வாயிலாக நீர்வரத்து கிடைக்கிறது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும்.
பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆந்திர மாநிலத்தின் எல்லையில் உள்ளதால், அங்கிருந்தும், மழை நீர்வரத்து கிடைக்கிறது. அங்கு, இன்னமும் தென்மேற்கு பருவமழை காலம் முடியவில்லை.
தாமதம்
தெலுங்கானாவில் திடீரென மழை தீவிரம் அடைந்தால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அங்குள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா அணை வழியாக ஆந்திராவின் கண்டலேறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து துவங்கும்.
மழை தீவிரம் அடையும் பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும், இது நடப்பதற்கு வாய்ப்புஉள்ளது.
நீர்வரத்து துவங்கும் இந்த நேரத்தில், பூண்டி ஏரியில் ஷட்டர்களை பழுதுபார்த்தல், மணல் போக்கிகளை புதிதாக பொருத்துதல் மட்டுமின்றி, புதிதாக நீரளவை கிணறு அமைக்கும் பணிக்கு 9.48 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்பணிகளை நீர்வளத்துறையினர் துவங்கியுள்ளனர்.
இதற்காக, அணையில் உள்ள ஷட்டர்கள் கழற்றி வைக்கப்பட்டு, பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதற்கு முன், ஏரியின் பழைய ஷட்டர்களை சீரமைப்பதற்கும், மணல் போக்கிகளை புதிதாக பொருத்துவதற்கும் 2020ம் ஆண்டு, நீர்வளத் துறைக்கு அரசு அனுமதி வழங்கியது.
இதற்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அப்போது, ஏரியில் மணல்போக்கிகள் புதிதாக பொருத்தப்படவில்லை. ஷட்டர்கள் சீரமைப்பு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.
நிதி ஒதுக்கீடு செய்து, நான்கு ஆண்டுகளாகியும் ஷட்டர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால், தெலுங்கானாவில் அதிகம் மழை பெய்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வரத்து இருந்தால், பூண்டியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, கொசஸ்தலையாறு வடிநில கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏரியில் உள்ள 16 மதகுகளில், 8 - 9வது மதகுகள், மணல் போக்கிகளாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு நீர் அதிகம் இருந்ததால், இவற்றை மாற்ற முடியவில்லை.
துரித பணி
தற்போது ஏரி வறண்டு கிடக்கிறது. இதை பயன்படுத்தி 14 மதகுகளில் ரோலர்கள் மற்றும் ரப்பர் 'சீல்' பொருத்தப்பட உள்ளது.
ஏரியின் ஷட்டர்கள் வெள்ளக்காலங்களில் கையால் சுற்றி திறக்கப்பட்டது. இப்போது, கருவி வாயிலாக ஷட்டரை திறப்பதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளன.
மதகுகள் துருப்பிடிக்காமல் இருக்க 'பிரைமர்' அடித்தல் உள்ளிட்ட பணிகளும் நடக்கவுள்ளன.
ஏரியில், 32 மீட்டர் துாரத்தில், கிணறு அமைத்து நீர்மட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. இதற்காக, கரையில் இருந்து அங்கு செல்வதற்கு பாதை அமைக்கப்பட உள்ளது.
செப்., 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
திடீரென மழை நீர்வரத்து துவங்கினால், அதை சமாளிப்பதற்கு, பெரிய ஷட்டர்களின் கீழ்பகுதியில் தற்காலிகமாக சிறிய ஷட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.