/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் வரி உயர்வுக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு மாநகராட்சி கூட்டத்தில் கம்யூ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
தொழில் வரி உயர்வுக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு மாநகராட்சி கூட்டத்தில் கம்யூ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தொழில் வரி உயர்வுக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு மாநகராட்சி கூட்டத்தில் கம்யூ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தொழில் வரி உயர்வுக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு மாநகராட்சி கூட்டத்தில் கம்யூ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஆக 01, 2024 12:35 AM
சென்னை, சென்னை மாநகராட்சியின் தொழில் வரி உயர்வு அறிவிப்பிற்கு, வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க, இந்த அறிவிப்பை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் வரி மற்றும் குறு, சிறு கடைகள், நிறுவனங்களுக்கான தொழில் உரிம கட்டணம் ஆகியவற்றை உயர்த்த, தமிழக அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது. இதற்கான தீர்மானத்திற்கு நேற்று, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர்.
மா.கம்யூ., கவுன்சிலர் ஜெயராமன் கூறியதாவது: சென்னையில் பணியாற்றும் பணியாளர்களில் குறைந்த ஊதியம் வாங்குவோருக்கு மட்டுமே தொழில் வரி, 35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிக ஊதியம் பெறுவோரை விட்டு, எளியோரை குறிவைத்து, தொழில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் சலுான் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட குறு, சிறு கடைகள், இதற்கு முன் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்தனர். தற்போது, 3,500 - 7,000 ரூபாய் என்ற அளவில், பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
மதுபானம் விற்பனை, பீடி தயாரிப்பு, ஒயின், சிகரெட் சேமித்து வைக்கும் கிடங்கு, புகையிலை பொருட்களுக்கு தொழில் உரிம கட்டணம் இல்லை.மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களை விற்பனை செய்யும் குறு, சிறு தொழில்களுக்கு கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டு, தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தீர்மானங்களை நிறுத்த, மேயர் பிரியாவிடம் கோரிக்கை வைத்தோம். ஏற்காததால், வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இ.கம்யூ., கவுன்சிலர் ரேணுகா கூறியதாவது: ஆறு மாதத்திற்கு 21,001க்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு தொழில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதிக சம்பளம் பெறுவோருக்கு, பழைய தொழில் வரி கட்டணமே உள்ளது. துாய்மை பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த அளவில் சம்பளம் பெறுவோருக்கு தொழில்வரியை உயர்த்த வேண்டாம் என கோரிக்கை வைத்தோம். அதேபோல் சிறு, குறு கடைகள் மீதான தொழில் உரிம கட்டண உயர்வையும் திரும்பப் பெற வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கையை யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், தொழில்வரி உயர்வுக்கு வணிகர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில், தொழில் வரியை அதிகபட்சமாக மூன்று மடங்கு உயர்த்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்வேறு தொழில் உரிமங்களாலும், ஜி.எஸ்.டி., சட்டங்களாலும், வணிகம் பல வகையிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், உரிமம் பெறுவதிலும், புதுப்பித்தலிலும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்த சூழலில், உரிம தொகைக்கும் அதிகப்படியாக தொழில் வரி வசூலிப்பது ஏற்புடையது அல்ல. வணிக அமைப்பின் நிர்வாகிகளிடம் ஆலோசிக்காமல், தொழில் வரியை உயர்த்தியது வருத்தத்திற்கு உரியது.
சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் வாழ்வாதாரத்தை தக்க வைக்க, தொழில் வரி உயர்வை உடனே நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில், மாத வருமானம் 60,000 ரூபாய்க்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை, 35 சதவீதம் வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிம கட்டணத்தை, 100 சதவீதம் வரையிலும் உயர்த்தியது, கடும் கண்டனத்திற்குரியது.
வாழ்வாதாரம் தேடி சிறிய கடைகள் நடத்துவோரிடம் கூட, இந்த அளவுக்கு கட்டண கொள்ளை நடத்துவதை மன்னிக்கவே முடியாது.
சொத்து வரி 175 சதவீதமும், 1,000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான கட்டணம் ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயர்வு, கட்டண உயர்வுகளை சுமத்தி வருவது, மனிதத்தன்மையற்ற செயல். மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுபானம் விற்பனை, பீடி தயாரிப்பு, ஒயின், சிகரெட் சேமித்து வைக்கும் கிடங்கு, புகையிலை பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றுக்கு தொழில் உரிமம் அளிக்கும் உரிமையை சென்னை மாநகராட்சி விட்டுக் கொடுத்து உள்ளது. தொழில் உரிம கட்டணம் விதிப்பதில் இருந்தும் மாநகராட்சி விலகிக் கொண்டதால், இவற்றுக்கு தொழில் உரிம கட்டணம் விதிக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டியுள்ள கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள், 'மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களை விற்பனை செய்யும் குறு, சிறு தொழில்களுக்கு கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டு, தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என, குற்றம்சாட்டி உள்ளனர்.