/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் ரவுடி சம்போ செந்தில் மீது வழக்கு
/
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் ரவுடி சம்போ செந்தில் மீது வழக்கு
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் ரவுடி சம்போ செந்தில் மீது வழக்கு
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் ரவுடி சம்போ செந்தில் மீது வழக்கு
ADDED : ஜூலை 24, 2024 01:23 AM

சென்னை, சாலை பணிகள் மற்றும் கட்டட ஒப்பந்ததாரரை மிரட்டி மாமூல் வசூலித்தது தொடர்பாக, ரவுடிகள் சம்போ செந்தில், ஈசா உள்ளிட்ட 13 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. சாலை பணிகள் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர். அவர், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று அளித்துள்ள புகார்:
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், மெட்டல் பாக்ஸ் கம்பெனி அருகே, ஒப்பந்தப்படி ஆட்களை வைத்து பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணியில் 2013 ல் ஈடுபட்டு வந்தேன். அப்போது, வழக்கறிஞர்கள் சரவணன், சிவகுருநாதன் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர், ரவுடி சம்போ செந்தில் அனுப்பி வைத்ததாக என்னிடம் வந்தனர்.
அவர்கள் வைத்திருந்த மொபைல் போனை என்னிடம் கொடுத்து பேசுமாறு கூறினர். எதிர்முனையில் பேசிய நபர், தன்னை சம்போ செந்தில் என, அறிமுகம் செய்து கொண்டார். 'எந்தவித கட்டுமான பணிகள் நடந்தாலும், 20 லட்சம் ரூபாய் மாமூல் தர வேண்டும்' என்றார். என்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை என கூறி, பணம் தர மறுத்தேன்.
'என்னை மீறி சென்னையில் தொழில் செய்ய முடியாது. மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும். தராவிட்டால், நீ உயிரோடு இருக்க மாட்டாய்' என, மிரட்டினார்.
உயிர் பயத்தில், கடந்தாண்டு ஜன., - மே மாதம் வரை, சரவணன், சிவகுருநாதன், மொட்டை கிருஷ்ணா ஆகியோரிடம் மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதன் பிறகும் மாமூல் கேட்டு மிரட்டினர்.
இவர்கள் மட்டுமின்றி, தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்த சிட்டிசன் அருண், வசந்த் உள்ளிட்ட மேலும் நான்கு பேர், என்னிடம் மாமூல் கேட்டு தொல்லை கொடுத்தனர். அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் ஈசா, எலி யுவராஜ் ஆகியோர் மாமூல் கேட்பதாக கூறி மிரட்டினர். அவர்களுக்கும், இரண்டு முறை தலா, 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன்.
தற்போது, திருவொற்றியூர் பகுதியில் வேறொரு ஒப்பந்த பணி செய்து வருகிறேன். அதற்காகவும் மாமூல் கேட்டு மிரட்டுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சம்போ செந்தில் உள்பட ரவுடிகள், வழக்கறிஞர்கள் என, 13 பேர் மீது புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில், சரவணன், சிவகுருநாதன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்போ செந்தில் மீது ஏற்கனவே, கொலை, கொலை முயற்சி என, நான்கிற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.