/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
30 ஆண்டு குடிநீர் குழாயை மாற்றுவதில்...சிக்கல்! டெண்டர் எடுக்க தயங்கும் ஒப்பந்ததாரர்கள்
/
30 ஆண்டு குடிநீர் குழாயை மாற்றுவதில்...சிக்கல்! டெண்டர் எடுக்க தயங்கும் ஒப்பந்ததாரர்கள்
30 ஆண்டு குடிநீர் குழாயை மாற்றுவதில்...சிக்கல்! டெண்டர் எடுக்க தயங்கும் ஒப்பந்ததாரர்கள்
30 ஆண்டு குடிநீர் குழாயை மாற்றுவதில்...சிக்கல்! டெண்டர் எடுக்க தயங்கும் ஒப்பந்ததாரர்கள்
ADDED : மே 04, 2024 11:24 PM

புளியந்தோப்பு பகுதி மக்களுக்காக, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை மாற்ற 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால், ஒதுக்கப்பட்ட நிதி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
திரு.வி.க., நகர் மண்டலம், புளியந்தோப்பு 72வது வார்டில், 220 தெருக்கள் உள்ளன. இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமாகிவிட்டன. இதனால், பல வீடுகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது.
பல வீடுகளுக்கு, குடிநீரே கிடைப்பதில்லை. வ.உ.சி., நகர் உள்ளிட்ட, 600க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் தொட்டி மற்றும் லாரி வாயிலாகவே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இப்பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்க, அயோத்திதாசர் பண்டிதர் நிதியிலிருந்து 20 கோடி ரூபாய் உட்பட, அரசு தரப்பில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இரண்டு முறை டெண்டர் கோரியும், ஒப்பந்ததாரர்கள் வராமலே உள்ளனர்.
இதற்கான காரணம் குறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புளியந்தோப்பில் மின்சாரம் மற்றும் கழிவுநீர் குழாய்களை, முறையாக அமைக்கவில்லை. தவிர, சாலையின் அமைப்பும் குறுகியும், விரிந்தும் முறையின்றி இருக்கிறது. இதனால், இப்பகுதியில் குழாய்கள் மாற்றும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
குடிநீர் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டால், மின்சாரம், கழிவுநீர் குழாய்கள் கண்டிப்பாக சேதமடையும். காரணம், 1 அடி ஆழத்திலே அவை புதைக்கப்பட்டுள்ளன.
குழாய் அமைப்பதற்காக, குறுகிய பகுதியில் பள்ளம் தோண்டும்போது, மற்ற சேவைகள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. அதனால், ஒப்பந்த பணியை எடுத்து செய்ய, ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
தவிர, 72வது வார்டுக்குட்பட்ட வ.உ.சி., நகர் உள்ளிட்ட தெருக்களில், மூன்று மாதங்களுக்கு முன், சிமென்ட் சாலை போடப்பட்டது.
அப்போது, குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை புதிதாக மாற்றியமைத்து, சாலை போட்டிருக்க வேண்டும். ஆனால் சாலைப்பணியை மட்டும் முடித்துவிட்டனர். தற்போது புதிதாக போட்ட சாலையை தோண்டி குடிநீர் குழாய் அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சேதமாகும் சாலையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பதாலும், அவர்கள் ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், 'இரண்டு முறை டெண்டர் கோரியும், ஒப்பந்தம் எடுக்க முன்வராததற்கு நிர்வாக சிக்கலும் ஒரு காரணமாக உள்ளது. குடிநீர் வாரிய ஒப்பந்த பணிக்கு குறைந்தது மூன்று பேர் வரவேண்டும்.
ஆனால், இப்பணியை எடுக்க ஒருவர் மட்டுமே வருவதால், அப்பணி கிடப்பில் உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை' என்றனர்.
வரி கட்ட மாட்டோம்
குடிநீர் வாரியம், எங்கள் பகுதிக்கு குடிநீரை முறையாக வினியோகிக்கவில்லை. இதனால் நாங்கள் வரியே கட்டமாட்டோம் எனக்கூறி, அதிகாரிகளை திருப்பி அனுப்பிவிட்டோம். குடிநீர் குழாய் இணைப்பை வேண்டுமானால் துண்டித்து கொள்ள சொல்லிவிட்டோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, லாரியிலும், குடிநீர் தொட்டியிலுமே தண்ணீர் பிடித்து வருகிறோம். சிமென்ட் சாலை போடும் போதே மொத்தமாக வேலை செய்ய கூறினோம். ஆனால், எங்கள் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. குடிநீர் வாரியம் சார்பில், புதிய குடிநீர் குழாய் அமைத்தால் கண்டிப்பாக ஆதரவு தருவோம்.
முகுந்தவள்ளி, 66,
வ.உ.சி., நகர், திரு.வி.க., நகர் மண்டலம்
- - நமது நிருபர் --