/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் பணிக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் சோத்துப்பாக்கம் சாலைக்கு விடிவு
/
வடிகால் பணிக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் சோத்துப்பாக்கம் சாலைக்கு விடிவு
வடிகால் பணிக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் சோத்துப்பாக்கம் சாலைக்கு விடிவு
வடிகால் பணிக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் சோத்துப்பாக்கம் சாலைக்கு விடிவு
ADDED : ஆக 26, 2024 02:23 AM

செங்குன்றம்:புதிய மழைநீர் வடிகால் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால், சோத்துப்பாக்கம் சாலை இரு வழிச்சாலையாக விரிவாகிறது.
சென்னை செங்குன்றம், ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல், தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சி வரை, 2.4 கி.மீ., துாரத்திற்கு, 7 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்ட புதிய மழைநீர் வடிகால், மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, 13 கோடி ரூபாய் மதிப்பில், சாலையின் இருபுறமும் அமைக்கும் பணி நடக்கிறது.
ஆனால், அந்த சாலையில், தனியார் ஆக்கிரமிப்புகளால், வடிகால் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மேலும், நெடுஞ்சாலைக்குரிய இடம், சரியாக அளவீடு செய்யப்படாமல் வடிகால் பணி நடப்பதாக, கட்டட உரிமையாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பினர்.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், பொன்னேரி தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள், சோத்துப்பாக்கம் சாலைக்குரிய இடங்களை மீண்டும் அளவீடு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வடிகால் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால் அமைப்பதன் வாயிலாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சோத்துப்பாக்கம் சாலை, இரு வழிப்பாதையாக விரிவாகிறது.
அந்த வகையில், ஏற்கனவே, 24.5 அடி அகலம் கொண்ட அந்த சாலை, 38.5 அடி அகலத்திற்கு விரிவடைகிறது. அதனால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீரும்.
எதிர்பார்ப்பு
வடிகால் பணி நடக்கும், 2.4 கி.மீ., துாரம் வரை, சாலை ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். அதே போன்று, பணி முடிந்த இடங்களில், வடிகால் மீது புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
மேலும், பருவ மழைக்கு முன், வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.