/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளாஸ்டிக் பொருள் அழிப்பு திட்டத்திற்கு குன்றத்துாரில் மூடுவிழா
/
பிளாஸ்டிக் பொருள் அழிப்பு திட்டத்திற்கு குன்றத்துாரில் மூடுவிழா
பிளாஸ்டிக் பொருள் அழிப்பு திட்டத்திற்கு குன்றத்துாரில் மூடுவிழா
பிளாஸ்டிக் பொருள் அழிப்பு திட்டத்திற்கு குன்றத்துாரில் மூடுவிழா
ADDED : ஏப் 25, 2024 12:38 AM

குன்றத்துார், பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதைக் கருதி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்வோரிடம், அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
எனினும், நகரம், கிராமம் என, அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளன. பயன்படுத்திவிட்டு துாக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்கள், நீர்நிலைகளில் அடைத்துக் கொள்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது; நீரோட்டத்திற்கும் தடைபடுகிறது.
இதை தடுப்பதற்கும், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தவும், அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை புறநகரில் உள்ள குன்றத்துார் ஒன்றியம் படப்பை ஊராட்சியில், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டங்கள் 2022ல் கொண்டு வரப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பையை மக்கும், மக்காதவையாக தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரமாக மாற்றப்பட்டது.
மக்காத குப்பையான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள், அரவை இயந்திரத்தில் அரைத்து துகள்களாக்கப்பட்டது.
அவற்றை, படப்பையில் உள்ள காந்த வெப்பச் சிதைவு இயந்திரக்கூடத்தில் காந்த சக்தி வாயிலாக தினம் 5 டன் குப்பைக் கழிவுகளை சாம்பலாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
படப்பையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், கைமேல் பலன் கிடைத்தது. அரவை இயந்திரத்தில் துகள்களாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாய் கிடைத்தது.
இந்த திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளை கிலோ 10 ரூபாய்க்கு வாங்கி, இவற்றை அரைத்து தார்ச்சாலை அமைக்க 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சாலையில் சிதறிக்கிடக்கும் குப்பையை சேகரித்து, அவற்றையும் அரைத்து சாலை அமைக்க வழங்கிய இத்திட்டம், பலரது கவனத்தை ஈர்த்தது.
மேலும், காந்த வெப்ப சிதைவு இயந்திரத்தில் தினம் 5 டன் குப்பைக்கழிவுகளை சாம்பலாக்க முடியும் என்பதால், சென்னை புறநகரில் சேகரமாகும் குப்பை, படப்பைக்கு எடுத்துச் சென்று எளிதாக அகற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
படப்பையில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை, தமிழக முழுதும் அமல்படுத்தி குப்பை பிரச்னைக்கு தீர்வு காணலாம் எனவும், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்த திட்டம், தற்போது பயன்பாடின்றி மூடியே கிடக்கிறது.
இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட முன்னுதாரணம் திட்டம், தற்போதுவீணாகியுள்ளது.
இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

